உலக கனிஷ்ட மெய்வல்லுனரில் அரையிறுதிக்கு முன்னேறிய தருஷி

World Junior Athletics Championships - 2021

364

கென்யாவின் நைரோபியில் கடந்த 17ம் திகதி ஆரம்பமாகிய உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் இரண்டாவது நாளான இன்று (19), இலங்கையைச் சேர்ந்த இரண்டு வீராங்கனை போட்டிகளில் பங்கேற்றனர்.

தருஷி காருணாரத்ன மற்றும் ஷானிகா லக்ஷானி ஆகியோர் மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றிருந்தனர். இதில், ஷானிகா லக்ஷானி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டதுடன், தருஷி காருணாரத்ன அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளார்.

உலக கனிஷ்ட மெய்வல்லுனரில் 7 இலங்கை வீரர்கள்!

இன்று மதியம் (19) நடைபெற்ற மகளிருக்கான 800 மீற்றர் தகுதிச் சுற்றுப்போட்டியில், ஷானிகா லக்ஷானி போட்டித்தூரத்தை 2:20.37 நிமிடங்களில் நிறைவுசெய்து 7வது இடத்தை பிடித்துக்கொண்டார். எனினும், குறித்த சுற்றில் இரண்டு வீராங்கனைகள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஷானிகா லக்ஷானி 5வது இடத்துக்கு முன்னேறினார். எனினும், முதல் மூன்று வீராங்கனைகள் மாத்திரமே அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை பெற்றிருந்தனர்.

இந்தநிலையில், 800 மீற்றர் பெண்களுக்கான தகுதிச் சுற்றுப்போட்டியில் பங்கேற்ற தருஷி கருணாரத்ன போட்டித்தூரத்தை 2:13.70 நிமிடங்களில் நிறைவுசெய்து, நான்காவது இடத்தை பிடித்துக்கொண்டார். எனினும், ஒரு வீராங்கனை போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், தருஷி கருணாரத்னவுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. அதுமாத்திரமின்றி, அரையிறுதிக்கும் தகுதிபெற்றார்.

அதன்படி, தருஷி கருணாரத்ன போட்டியிடவுள்ள பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தின் அரையிறுதிப் போட்டி நாளை (20) மாலை 06.50 இற்கு நடைபெறவுள்ளது. அத்துடன், மெதானி ஜயமான்ன போட்டியிடவுள்ள பெண்களுக்கான 200 மீற்றர் முதல் சுற்றுப்போட்டி நாளை பிற்பகல் 01.30 இற்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<