சந்திமால், அவிஷ்கவின் பிரகாசிப்புடன் ரெட்ஸ் அணிக்கு முதல் வெற்றி

Dialog-SLC Invitational T20 League 2021

1670

டயலொக் SLC அழைப்பு T20 தொடரில் இன்று (16) நடைபெற்ற முதல் போட்டியில், தினேஷ் சந்திமாலின் தலைமையிலான SLC ரெட்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

SLC கிரீன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ரெட்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய கிரீன்ஸ் அணிக்கு கடந்த இரண்டு போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் உதவிய, கமிந்து மெண்டிஸ் இந்தப்போட்டியிலும் சோபிக்க, அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

குசல் பெரேராவுக்கு கொவிட்-19 தொற்று

கமிந்து மெண்டிஸ் முதல் இரண்டு போட்டிகளிலும் அரைச்சதம் கடந்திருந்ததுடன், இந்தப் போட்டியிலும் அரைச்சதம் கடந்திருந்தார். கமிந்து மெண்டிஸ் அதிகபட்சமாக 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இவருக்கு அடுத்தப்படியாக சம்மு அஷான் 29 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் இந்த தொடரில் தமது முதல் போட்டியில் களமிறங்கிய சாமிக்க கருணாரத்ன 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 144 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ரெட்ஸ் அணி, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோரின் மிகச்சிறந்த அரைச்சதங்களின் உதவியுடன் 17.3 ஓவர்கள் நிறைவில் விக்கெட்டிழப்பின்றி இலகுவான வெற்றியை பதிவுசெய்தது. 

அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் முதலிரண்டு போட்டிகளிலும் ஓட்டங்களை பெற தவறியிருந்த போதும் இந்தப் போட்டியில் மிகச்சிறப்பாக ஆடியிருந்தனர். அவிஷ்க பெர்னாண்டோ 58 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகளுடன் 82 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், தினேஷ் சந்திமால் 44 பந்துகளில் 51 ஓட்டங்களை பெற்றக்கொடுத்தார்.

இதில், தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காத போதும், நுவான் துஷார வீசிய பந்து சந்திமாலின் கால் பகுதியில் தாக்க, அவர் மைதானத்திலிருந்து வெளியேறினார். இவருக்கு அடுத்தப்படியாக களமிறங்கிய அசேல குணரத்ன 3 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் SLC ரெட்ஸ் அணி தங்களுடைய முதலாவது வெற்றியை பதிவுசெய்துள்ளதுடன், கிரீன்ஸ் அணி தங்களுடைய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<