ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL), அவுஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஐசிசி T20 உலகக் கிண்ணம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், செப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள IPL தொடரில், அவுஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பதில் உறுதியற்றத்தன்மை காணப்பட்டது.
புளூஸ் அணியை தோல்வியிலிருந்து மீட்ட அஷேன், சஹன்!
எனினும், தற்போது T20 உலகக் கிண்ணத்துக்கான தயார்படுத்தலுக்காக, IPL தொடரில் வீரர்கள் விளையாடுவதற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை சம்மதம் தெரிவித்துள்ளது.
IPL தொடருக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள வீரர்களில் பெட் கம்மின்ஸ், கொல்கத்தா அணியுடன் இணையமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட் கம்மின்ஸின் மனைவி முதல் குழந்தையை பிரசவிக்கவுள்ளதால், இவர் விளையாடமாட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், முழங்கை உபாதைக்கு முகங்கொடுத்து, மே.தீவுகள் மற்றும் பங்களாதேஷ் தொடரிலிருந்து நீக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித், IPL தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தநிலையில், இந்தியாவில் IPL தொடர் நடைபெற்ற போது, அணிகளிலிருந்து விலகிய வீரர்கள் மீண்டும், விளையாடமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, ஜோஸ் ஹெஷல்வூட், மிச்சல் மார்ஷ் மற்றும் ஜோஸ் பிலிப்பி ஆகியோர் மீண்டும் தங்களுடைய அணிகளில் இணைந்துக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.
அதுமாத்திரமின்றி, தொடர்ந்து உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் இருந்ததன் காரணமாக, அவுஸ்திரேலியாவின் கடந்த தொடர்களிலிருந்து வெளியேறியிருந்த கிளேன் மெக்ஸ்வேல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஜெய் ரிச்சட்சன், கேன் ரிச்சட்சன் மற்றும் டேனியல் சேம்ஸ் ஆகியோர் தங்களுடைய அணிகளில் இணைந்துக்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது, T20 உலகக் கிண்ணத்துக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவிருந்தது. எனினும், கொவிட்-19 தொற்று காரணமாக இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை, அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுடன் முத்தரப்பு தொடர் ஒன்றை விளையாடுவதற்கு திட்டமிட்டு வருகின்றது. T20 உலகக் கிண்ணத்துக்கான தயார்ப்படுத்தலுக்காக இந்த தொடரை திட்டமிட்டு வருகின்றது. எனினும், IPL தொடர் மற்றும் T20 உலகக் கிண்ணம் குறுகிய கால இடைவெளியில் நடைபெறுவதன் காரணமாக இந்த தொடரை நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அத்துடன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் உள்ளூர் போட்டிகளுக்கான பருவகாலமும், IPL தொடருடன் ஆரம்பமாகிறது. எனினும், அவுஸ்திரேலியாவில் நிலவும் கொவிட்-19 தொற்று காரணமாக, உள்ளூர் போட்டிகளுக்கான திகதிகள் அறிவிக்கப்படவில்லை.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…