இரண்டு வருட ஒப்பந்தத்தில் PSG யுடன் இணைந்தார் மெஸ்ஸி

393
Getty Images

பார்சிலோனா அணியின் முன்னாள் தலைவரும், உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவருமான லியோனல் மெஸ்ஸி, பிரான்சின் பரிஸ் செயிண்ட் ஜெர்மைன் கழகத்துடன் (PSG) 2 வருட ஒப்பந்த அடிப்படையில் இணைந்துள்ளதாக PSG கழகம் இன்று அதிகாலை (11) அறிவித்தது.

34 வயதான மெஸ்ஸி கடந்த வாரம் பார்சிலோனா அணியுடன் புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இருந்த நிலையில், லாலிகாவின் புதிய விதிமுறைகளுக்கு அமைவாக பார்சிலோனா அணியினால் மெஸ்ஸியினை ஒப்பந்தம் செய்ய முடியாமல் போய் விட்டது. இதன் காரணமாக இரு தரப்பினரது விருப்பமுமின்றி மெஸ்ஸிக்கு பார்காவை விட்டு வெளியேற நேரிட்டது.

BARCA வின் செல்லப்பிள்ளைக்கு என்ன நடந்து? | FOOTBALL ULAGAM

இந்த நிலையில் 11ஆம் திகதி மெஸ்ஸியை  75 மில்லியன் டொலர்களுக்கு இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் PSG அணி வாங்கியுள்ளது. PSG அணி, மெஸ்ஸிக்கு வருடாந்தம் 35மில்லியன் யூரோக்களை சம்பளமாக வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. 

ஏற்கனவே, நேற்று PSG அணியில் மெஸ்ஸிக்கு இடம்பெற்ற மருத்துவப் பரிசோதனைகளுக்காக பரிஸ் நகரை வந்தடைந்த போது அங்கு அவருக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. கடந்த சில நாட்களாகவே, மெஸ்ஸி எப்போது PSG அணியுடன் இணைவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இது புதிய ஒரு உட்சாகத்தைக் கொடுத்துள்ளது. 

பார்சிலோனா அணியில் 10 ஆம் இலக்க சீருடையில் விளையாடிய மெஸ்ஸி, தற்போது PSGஅணியில் 30ஆம் இலக்க சீருடையில் விளையாடுவாரென தெரிவிக்கப்ட்டுள்ளது.

20 வருடமாக பார்சிலோனா அணியோடு 778 போட்டிகளை விளையாடி அதில் 672 கோல்களையும் அடித்து, அவ்வணியுடன் 35 கிண்ணங்களையும் வென்றதோடு 6 பலோன் டி ஓர் விருதுகளை வென்ற ஒரே வீரராக வலம் வரும் மெஸ்ஸியின் வருகை PSG அணியை மேலும் பலப்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

பார்சிலோனாவிலிருந்து வெளியேறினார் மெஸ்ஸி

ஏற்கனவே ஹாகிமி, வினால்டம், ராமோஸ், டொன்னருமா ஆகிய வீரர்களை இந்த பருவகாலத்தில் வாங்கியுள்ள PSG அணி, தற்போது மெஸ்ஸியையும் வாங்கி தமது கன்னி சம்பின்ஸ் கிண்ணததை  வெல்லும் கனவை மேலும் ஸ்திரப்படுத்தியுள்ளது. 

தனது புதிய அணி பற்றி கருத்து தெரிவித்த மெஸ்ஸி, “பரிஸில் எனது புதிய பக்கத்தை தொடங்க ஆவலுடன் இருக்கிறேன். இந்த கழகத்திற்கு பல இலட்சியங்கள் உள்ளன. இங்கு பல சிறந்த வீரர்களும், பயிற்றுனர்களும் உள்ளனர். நான் பரிஸ் மைதானத்தில் கால்தடம் பதிக்க ஆவலுடன் உள்ளேன்” எனத் தெரிவித்தார். 

ஏற்கனவே அவ்வணியின் முன்கள வீரர்களாக ம்பப்பே, நெய்மர் இருக்கும் நிலையில் மெஸ்ஸியின் வருகை இப்போதே PSGயோடு விளையாடும் எதிரணிகளை யோசிக்கும் படி செய்து விட்டது. 

PSG அணியானது, மெஸ்ஸியுடன் தமது ஒப்பந்த நடவடிக்கைகளை ஆரம்பித்த நாளில் இருந்து அந்த அணியின் சமூக வலைத்தளங்களில் பின்பற்றுனர்களின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<