41 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு படைத்த இந்திய ஹொக்கி அணி

Tokyo Olympics - 2020

287
Getty Image/ Reuters

டோக்கியோ ஒலிம்பிக்கின் 13ஆவது நாளான நேற்றைய தினம் இந்தியா இரண்டு பதக்கங்களை வென்று அசத்தியது.

இதில் நேற்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய ஹெக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தது.

அதேபோல, ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளி பதக்கம் வென்றார்.

ஏழு ஆண்டுகள் காத்திருந்து உசைன் போல்ட்டின் இடத்தைக் கைப்பற்றிய கனடா வீரர்

இதுஇவ்வாறிருக்க, மெய்வல்லுனர் போட்டிகளின் 7ஆவது நாளான இன்றைய தினம் எட்டு போட்டிகளுக்கான பதக்கங்கள் வழங்கப்பட்டன

எனவே, டோக்கியோ ஒலிம்பிக்கின் 13ஆவது நாளில் இடம்பெற்ற முக்கிய போட்டிகள் நிகழ்ச்சிகளின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.   

ஹொக்கியில் இந்தியா வரலாற்று வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக், இந்தியாஜேர்மனி அணிகள் இடையிலான வெண்கலப் பதக்கத்துக்கான ஆண்களுக்கான ஹொக்கி போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.

வெண்கலப் பதக்கத்துக்கான ஆண்களுக்கான ஹொக்கி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாஜேர்மனி அணிகள் மோதின

போட்டி தொடங்கிய முதல் 2ஆவது நிமிடத்திலேயே ஜேர்மனி அணி கோல் அடித்து முன்னணி வகித்தது.

முதல் கால் ஆட்டத்தில் இந்தியாவுக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்து. ஆனால் இந்தியாவால் முதல் கோலை பதிவு செய்யவில்லை. ஆனால் அதன் பின்பு ஜேர்மனி 2 கோல்களை அடுத்தடுத்து விளாசி அதிர்ச்சி கொடுத்தது.

இதையடுத்து இந்திய வீரர்கள் கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை கோலாக்கினர். பின்பு இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் இந்தியாவுக்கான 3ஆவது கோலை பதிவு செய்தார். இதனையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் இந்தியா 3, ஜேர்மனி 3 கோல்கள் என சமநிலையில் இருந்தன

இரண்டாம் பாதியில் இந்திய வீரர் ருபிந்தர் சிங் பால் அற்புதமான கோலை அடித்தார். இதனையடுத்து ஜேர்மனி வீரர் செய்த தவறால் இந்தியாவுக்கு பெனால்ட்டி ஸ்டோக் வாய்ப்பு கிடைத்து. இதனை சிம்ரன்ஜீத் கவுர் எதிர்கொண்டு 5ஆவது கோல் அடித்தார்.

ஆனாலும் போட்டியில் தொடர்ந்து சளைக்காமல் விளையாடிய ஜேர்மனி அணியினர் இரண்டாவது பாதியில் மற்றொரு கோலை பதிவு செய்தனர். இந்தியா தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடி ஆட்ட நேர முடிவு வரை ஜேர்மனியின் கோல் போடும் முயற்சியை தடுத்தனர்.

போட்டி முடிய வெறும் 6 நிமிடங்கள் இருந்த நிலையில் ஜேர்மனிக்கு ஒரு பெனால்ட்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்திய அணி வீரர்கள் அந்த வாய்ப்பை கச்சிதமாக முறியடித்தனர்

இறுதி நேர முடிவில் 5-4 என்ற கணக்கில் இந்தியா வெற்றிப்பெற்று, ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்று சாதனை படைத்தது.

ஒலிம்பிக் ஹொக்கியில் ஒருகாலத்தில் முன்னணி அணியாக வலம்வந்த இந்திய அணி 8 தங்கம் உள்ளிட்ட 11 பதக்கங்களை வென்றுள்ளது

Photos: India vs Great Britain – Men’s Q4 | Tokyo 2020 Olympic Games

இறுதியாக 1980ஆம் ஆண்டு மொஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றது. அதன்பின் 41 ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் பங்கேற்றுவரும் இந்திய ஆண்கள் ஹொக்கி அணியால் ஒரு பதக்கத்தைக் கூட வெல்ல முடியவில்லை.

ஆனால், தற்போது 41 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக வெண்கலப் பதக்கத்தை இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது

அதேபோல, 49 ஆண்டுகளுக்குப் பின் இம்முறை ஒலிம்பிக்கில் அரை இறுதிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி பதக்கத்தோடு நாடு திரும்புகிறது.

மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

டோக்கியோ ஒலிம்பிக், ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா, உலக சம்பியன் ரஷ்ய வீரர் ஜாவுர் உகுவேவை எதிர்கொண்டார்.

இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் நீண்ட போராட்டத்துக்குப் பின்னர், திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவிக்குமார் தாஹியா ரஷ்யா வீரரிடம் தோற்றார்.

முதல் சுற்று ஆரம்பத்தில் 2 2 என்ற புள்ளிக்கணகில் சமநிலையில் இரு வீரர்களும் இருந்தனர். அப்போது இந்திய வீரர் சற்றே சறுக்கலை சந்திக்க ரஷ்ய வீரர் புள்ளிகளைக் குவித்தார். இறுதியில் ஷ் வீரர் 7க்கு 2 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டி தங்கப் பதக்கம் வென்றார்.

இதனால், இந்திய வீரர் ரவிக்குமாருக்கு வெள்ளிப் பதக்கமே பெற முடிந்தது. சுஷில் குமாருக்குப் பிறகு மல்யுத்த விளையாட்டில் இரண்டாவது வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற பெருமையையும் ரவி தாஹியா பெற்றுக்கொண்டார்.

இதனிடையே, இந்தியாவுக்கு இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் கிடைத்துள்ள இரண்டாவது வெள்ளிப் பதக்கம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஐந்து பதக்கங்களைப் பெற்றுள்ளது.

110 மீட்டர் தடை தாண்டலில் ஜமைக்கா தங்கம்

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்களுக்கான 110 மீட்டர் தடைதாண்டல் இறுதிப் போட்டியில் ஜமைக்காவின் ஹேன்சல் பிரான்ச்மென்ட் தங்கப் பதக்கம் வென்றார்.

போட்டியை 13.04 செக்கன்களில் நிறைவுசெய்த அவர், இப்பருவகாலத்துக்கான தனது அதிசிறந்த நேரப்பெறுமதியையும் பதிவுசெய்தார்.

முன்னதாக 2012 லண்டன் ஒலிம்பிக்கில் ஹேன்சல் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே, உலக சம்பியனான அமெரிக்காவின் கிரான்ட் ஹோல்லவே, 13.09 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கம் வென்றார்

ஜமைக்காவைச் சேர்ந்த மற்றொரு வீரரான ரொனால்ட் லீவி 13.10 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெண்கலப் பதக்கம் வென்றார்

Photos: Mathilda Karlsson | 2020 Tokyo Olympics Equestrian

ஒரே பிரிவில் ஒரே வெற்றியாளர்கள்

டோக்கியோ ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் அமெரிக்க வீரர் ரியான் குரூசர் தங்கப் பதக்கம் வென்றார்

இந்தப் போட்டியின் கடைசி வாய்ப்பில் 23.30 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து தங்கப் பதக்கம் வென்ற அவர், தனது சொந்த ஒலிம்பிக் சாதனையை முறியடித்தார்.

இறுதியாக நடைபெற்ற 2016 ரியோ ஒலிம்பிக்கிலும் இவர் தங்கப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மற்றொரு அமெரிக்க வீரர் ஜோ கோவாக்ஸ் 22.65 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கத்தையும், நியூசிலாந்து வீரர் தோமஸ் வோல்ஸ் 22.47 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

2016 ரியோ ஒலிம்பிக்கில் குண்டு போடுதல் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்ற அதே போட்டியாளர்களே இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கிலும் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வெற்றி கொண்டமை கவனிக்கத்தக்கது

ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக ஒரே வெற்றியாளர்கள் அடுத்தடுத்து நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் அதே பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்

கிரனைடா நாட்டு வீரருக்கு ஹெட்ரிக் பதக்கம்

2012 லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 400 மீட்டரில் தங்கப் பதக்கமும், 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் வென்ற கிரெனைடா நாட்டைச் சேர்ந்த கிரினி ஜேம்ஸ், 2017இல் தைரொயிட் ஹோமோர்ன் அதிகளவில் சுரக்கின்ற ஒருவகை நோயொன்றினால் பாதிக்கப்பட்டார்

இதனால் அவர் ஓராண்டுக்கு மேலாக விளையாட்டிலிருந்து விலகியிருந்தார். எனினும், நோயிலிருந்து குணமடைந்த அவர் இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் களமிறங்கி போட்டியை 44.19 செக்கன்களில் நிறைவுசெய்து வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

இதனிடையே, உலக சம்பியனான பஹாமஸைச் சேர்ந்த ஸ்டீவன் காட்னர், போட்டியை 43.48 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தையும், கொலம்பியாவின் ஜோஷ் அன்தனி (44.08) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.

டோக்கியோவை சாதனைகளால் அலங்கரித்த மும்மூர்த்திகள்

புர்கினா பார்சோவுக்கு முதல் ஒலிம்பிக் பதக்கம்

ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் புர்கினா பார்சோ நாட்டைச் சேர்ந்த ஹியூஜஸ் பெப்ரிஸ் செங்கோ (17.47 மீட்டர்) வெண்கலப் பதக்கம் வென்று தங்கள் நாட்டை ஒலிம்பிக் வரலாற்று புத்தகத்தில் இடம்பெறச் செய்தார்

மேற்கு ஆபிரிக்கா நாடான புர்கினோ பார்சோவுக்கான முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்று கொடுத்த அவர், 2019 உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆபிரிக்கா சாதனையை முறியடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்

இதனிடையே, குறித்த போட்டியில் தங்கப் பதக்கத்தை போர்த்துக்கலைச் சேர்ந்த பெட்ரோ பிகாடோ பெற்றுக்கொண்டார். இவர் போட்டியில் 17.98 மீட்டர் தூரத்தைப் பாய்ந்தார்.

எதுஎவ்வாறாயினும், ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் இரண்டு தடவைகள் தங்கம் வென்ற அமெரிக்கா வீரர் கிறிஸ்டியன் டேலர் உபாதை காரணமாக இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகினார்

பெண்கள் கோலூன்றிப் பாய்தலில் புதிய சம்பியன்

டோக்கியோ ஒலிம்பிக்கின் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 4.90 மீட்டர் உயரத்தைத் தாவிய அமெரிக்கா வீராங்கனை கெதி நெஜொட் தங்கப் பதக்கம் வென்றார்.

30 வயதான கெதி, ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்

இதனிடையே, 4.85 மீட்டர் உயரத்தைத் தாவிய ரஷ்யா வீராங்கனை அன்செலிகா சிடொரோவா வெள்ளிப் பதக்கத்தையும். பிரித்தானியாவின் ஹேலி பிராட்சோ (4.85 மீட்டர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்

Photos: Day 8 – 2020 Tokyo Olympic Games

ஜப்பானுக்கு முதல் பதக்கம்

டோக்கியோ ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான வேகநடைப் போட்டியில் இத்தாலியின் மாசிமோ ஸ்டெனோ, போட்டியை ஒரு மணித்தியாலம் 21.05 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கம் வென்றார்

இந்தப் போட்டியில் ஜப்பான் வீரர்களான இகெடா கொக்கி மற்றும் டொக்கியமசு யமனிசி ஆகிய இருவர்களும் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை வென்று இம்முறை ஒலிம்பிக் மெய்வல்லுனரில் ஜப்பானுக்கான முதலாவது பதக்கத்தை வென்று கொடுத்தனர்.

கனடா வீரரின் ஒலிம்பிக் சாதனை

ஆண்களுக்கான டெகத்லன் (10 அம்சப் போட்டி) போட்டியில் 9 ஆயிரம் புள்ளிகளைக் கடந்த உலகின் நான்காவது வீரராக கனடா வீரர் டேமியன் வோர்னர் இடம்பிடித்தார்.

இம்முறை டோக்கியோ ஒலிம்பிக் டெகத்லன் பேட்டியில் 9018 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட அவர், புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

இந்தப் போட்டியின் பிரான்ஸ் வீரர் கெவின் மேயர் (8726 புள்ளிகள்) வெள்ளிப் பதக்கத்தையும், அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி மொலொனி (8649 புள்ளிகள்) வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

நான்கு‌ ‌ஒலிம்பிக்கில்‌ ‌நான்கு‌ ‌தங்கங்கள்:‌ ‌38‌ ‌வயது‌ ‌கியூபா‌ ‌வீரர்‌ ‌ சாதனை‌

கால்பந்தில் அமெரிக்காவுக்கு வெண்கலம்

பெண்களுக்கான கால்பந்தில் வெண்கலப் பதக்கதுக்கான போட்டியில் அமெரிக்கா அணி 4இற்கு 3 என்ற  கோல்கள் கணக்கில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது.

சீனா தொடர்ந்து முதலிடம்

டோக்கியோ ஒலிம்பிக்கின் 13ஆவது நாள் நிறைவடையும் போது பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இதன்படி, சீனா 34 தங்கம், 24 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கம் பெற்று முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 29 தங்கம், 35 வெள்ளி, 27 வெண்கலப் பதக்கம் பெற்று 2ஆவது இடத்தில் உள்ளது.

ஜப்பான் 22 தங்கம், 10 வெள்ளி, 14 வெண்கலத்துடன் 3ஆவது இடத்தில் உள்ளது.

 மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க…