“T20I பந்துவீச்சு தரவரிசையில் வனிந்து விரைவில் முதலிடம் பிடிப்பார்”- ஷானக

India tour of Sri Lanka 2021

1060

இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளராக வளர்ந்துவரும் வனிந்து ஹசரங்க விரைவில், T20I பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தை பிடிப்பார் என இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுற்றுலா இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது T20I போட்டியில் வெற்றிபெற்றதன் பின்னர், இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, தசுன் ஷானக இதனை தெரிவித்தார். அத்துடன், வனிந்து ஹசங்க குறைந்த காலப்பகுதிக்குள் அனுபவ ரீதியாக விளையாட கற்றுக்கொண்டதாகவும் தசுன் ஷானக மேலும் குறிப்பிட்டார்.

மெண்டிஸ், டிக்வெல்ல, குணதிலக்கவுக்கு ஓராண்டு தடை ; 1 கோடி அபராதம்

“வனிந்து ஹசரங்க மிகவும் விரைவாக அனுபவ ரீதியாக விளையாடுகிறார். வீரர்கள் இவ்வாறு தங்களை மெழுகேற்றிக்கொள்ளவேண்டும். இந்த தொடரின் போது, பல வீரர்களிடம் இதனை நான் காணக்கூடியதாக இருந்தது. துஷ்மந்த சமீர, அவிஷ்க பெர்னாண்டோ, சாமிக்க கருணாரத்ன ஆகியோரும் பொறுப்புடன் விளையாடுகின்றனர்.

அதுமாத்திரமின்றி தனன்ஜய டி சில்வாவும் தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பாக விளையாடுகின்றார். எனவே அனுபவத்தை பெற்றுக்கொண்டு விளையாடுவது மிகவும் முக்கியம். வனிந்து ஹசரங்க T20I  தரவரிசையில் முதலாம் இடத்துக்கு வரக்கூடிய வீரர். எனவே, விரைவாக அவர் தவரிசையில் முதலிடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

இதேவேளை, இந்திய தொடரின் போது, விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட தனன்ஜய லக்ஷான் தொடர் முழுவதும் விளையாடவில்லை. எனவே, ஏன் தனன்ஜய லக்ஷான் இறுதி பதினொருவரில் இணைக்கப்படவில்லை என்ற கேள்விக்கும் தசுன் ஷானக பதிலளித்துள்ளார்.

“தனன்ஜய லக்ஷானுக்கு வாய்ப்பு கொடுப்பதற்கான சிறந்த தொடர் இதுதான். எனினும், அதற்கு முந்தைய போட்டிகளில் எமது துடுப்பாட்டம் சற்று மோசமாக இருந்தது. எனவே, அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அணித்தலைவர் என்ற ரீதியில் T20I அணியில் தனன்ஜய லக்ஷானுக்கு வாய்ப்பிருக்கிறது என்பதை நிச்சயமாக கூறுகிறேன். அவர், தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருப்பார். எதிர்வரும் காலங்களில் கட்டாயமாக எமது பதினொருவரில் இடம்பிடிப்பார்” 

இதேவேளை, அனுபவ வீரர்கள் மீண்டும் அணியில் இணைந்து எதிர்வரும் காலங்களில் தங்களுடைய பங்களிப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையை தசுன் ஷானக வெளியிட்டதுடன், தன்னுடைய பிரகாசிப்பில் உள்ள குறைபாடுகளையும் நிவர்த்திசெய்துக்கொண்டு அடுத்துவரும் தொடர்களில் விளையாட எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<