ஆஸி.யில் பயிற்சியாளராக அவதாரம் எடுக்கும் அனூஷ சமரநாயக்க

221

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சுப் பயிற்சியாளரான அனூஷ சமரநாயக்க அவுஸ்ரேலியாவின் மல்கிரெவ் கிரிக்கெட் கழகத்தின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் முன்னணி கழகங்களில் ஒன்றாக மல்கிரெவ் கிரிக்கெட் கழகம் விளங்குகிறது. இந்த கழகத்தில் பெரும்பாலான இலங்கை வம்சாவளி வீரர்கள் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் 2021/22 பருவகாலத்துக்கான கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் அந்தக் கழகம் பல புதிய வீரர்களையும், பயிற்சியாளர்களையும் ஒப்பந்தம் செய்து வருகின்றது.

காஷ்மீர் பிரீமியர் லீக்கில் விளையாட டில்ஷானுக்கு அழைப்பு

இதன்படி, ஆரம்பத்தில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான திலகரட்ன டில்ஷான் அந்தக் கழகத்தின் தலைவராக கடந்த சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற உபுல் தரங்க அந்தக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்.

இதனைத்தொடர்ந்து இலங்கை அணியின் மற்றுமொரு நட்சத்திர வீரரான சனத் ஜயசூரியவை எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கு தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க மல்கிரெவ் கிரிக்கெட் கழகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

Video – அவுஸ்திரேலியாவில் பயிற்சியாளர் அவதாரம் எடுக்கும் SANATH JAYASURIYA…!

இதனிடையே, 2021/22 பருகாலத்திலிருந்து எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கு மல்கிரெவ் கழகத்தின் உதவிப் பயிற்சியாளராக அனூஷ சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கழகம் நேற்று (04) உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.

2000ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சு பயிற்சியாளராக அனூஷ சமரநாயக்க பணியாற்றியுள்ளார்.

இதில் இலங்கை அணிக்கு பல வெற்றிகளையும், சாதனைகளையும் ஈட்டிக் கொடுத்த லசித் மாலிங்க மற்றும் நுவன் குலசேகர போன்ற வீரர்களின் வளர்ச்சிக்கு அவர் மிகப் பெரிய பங்களிப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…