நடப்புச் சம்பியனை வீழ்த்திய பெல்ஜியம் மற்றும் செக் குடியரசு காலிறுதியில்

UEFA EURO 2020

222

யூரோ 2020 கால்பந்து தொடரில் தோல்வி காணாத டென்மார்க்கை வீழ்த்திய செக் குடியரசும், விறுவிறுப்பான போட்டியில் நடப்புச் சம்பியன் போர்த்துக்கல் அணியை வீழ்த்திய பெல்ஜியமும் தொடரின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. 

குறித்த இரண்டு போட்டிகளினதும் விபரம் கீழே. 

நெதர்லாந்து எதிர் செக் குடியரசு  

ஹங்கேரி தலைநகர் படபெஸ்டில் உள்ள Puskás அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற 16 அணிகள் சுற்றுக்கான இந்தப் போட்டியில், லீக் சுற்றில் C குழுவில் முதலிடம் பிடித்த நெதர்லாந்தும் D குழுவில் மூன்றாம் இடம் பிடித்த செக் குடியரசும் மோதின.   

யூரோ அடுத்த சுற்றுக்குள் நுழைந்த இங்கிலாந்து, குரோசியா அணிகள்

போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் சம பலத்துடன மோதியதன் காரணமாக குறித்த பாதியில் இரண்டு அணிகளாலும் கோல்கள் எதனையும் பெற முடியாமல் போனது. 

எனினும், பந்தை கையால் வேண்டும் என்றே பிடித்தமைக்காக போட்டியின் 54ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் De Ligt சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதன்போது VAR முறையினாலேயே அவரது பிழை கண்டறியப்பட்டது. 

எனவே, 10 வீரர்களுக்கு எதிராக விளையாடிய செக் குடியரசு அணி வீரர்கள் போட்டியை முழுமையாக தமது பக்கம் திருப்பினர். 

ஆட்டத்தின் 67ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோல் திசையில் கிடைத்த பிரீ கிக்கின்போது உள்வந்த பந்தை செக் குடியரசு வீரர் Kalas கோலின் இடது பக்க கம்பத்தில் இருந்து ஹெடர் செய்ய, மீண்டும் அதனை சக அணி வீரர் Holes ஹெடர் மூலம் கோலாக்கினார்.  

அடுத்த 12 நிமிடங்களில் தமது பகுதியில் இருந்து வழங்கப்பட்ட ப்ரீ கிக் பந்தினை Holes முன்னோக்கி எடுத்துச் சென்று பரிமாற்றம் செய்ய, அதனை Schick, செக் குடியரசு அணிக்கான அடுத்த கோலாக மாற்றினார். 

சம்பியன் பட்டத்தினை தக்கவைக்குமா போர்த்துகல்??

இதனால், போட்டி நிறைவில் 2 – 0 என வெற்றி பெற்ற செக் குடியரசு காலிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியது. லீக் சுற்றில் எந்தவொரு தோல்வியையும் சந்திக்காது நொக் அவுட் சுற்றுக்கு வந்த நெதர்லாந்து அணிக்கு, இது முதல் தோல்வியாக, அமைய, அவ்வணி யூரோ 2020 தொடரில் இருந்து வெளியேறியது. 

முழு நேரம்: நெதர்லாந்து 0 – 2 செக் குடியரசு

கோல் பெற்றவர்கள் 

  • செக் குடியரசு – Holes 68′, Schick 80′
  • பெல்ஜியம் எதிர் போர்த்துக்கல் 

லீக் சுற்றில் B குழுவில் முதலிடம் பிடித்த பெல்ஜியம் அணி, ஸ்பெயின் La Cartuja அரங்கில் 28ஆம் திகதி நள்ளிரவு (இலங்கை நேரம்) இடம்பெற்ற இந்தப் போட்டியில் E குழுவில் மூன்றாம் இடம் பிடித்த போர்த்துக்கல் அணியை எதிர்கொண்டது. 

போர்த்துக்கல் அணிக்கு கிடைத்த பிரீ கிக்கின்போது ரொனால்டோ உதைந்த பந்தை பெல்ஜியம் கோல் காப்பாளர் Courtois தடுத்தார். இது போர்த்துக்கல் அணிக்கு முதல் பாதியில் கோலுக்காக கிடைத்த சிறந்த வாய்ப்பாக அமைந்தது. 

போட்டியின் 42ஆவது நிமிடத்தில் பெல்ஜிய வீரர் Meunier வழங்கிய பந்தின்மூலம் தோர்கன் ஹசார்ட் யூரோ நடப்புச் சம்பியன் போர்த்துக்கல் அணிக்கு எதிராக, போட்டியின் முதல் கோலைப் பதிவு செய்தார். 

 5 விநாடிகளில் சந்தையை மாற்றிய RONALDO  

ஆட்டத்தின் 80 நிமிடங்கள் கடந்த நிலையில் போர்த்துக்கல் அணிக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்தை ரூபன் டயஸ் கோலுக்குள் ஹெடர் செய்தார். எனினும் பந்தை Courtois தனது கைகளால் தடுத்தார். 

அடுத்த நிமிடம் போர்த்துக்கல் வீரர் Guerreiro கோல் எல்லைக்கு வெளியில் இருந்து கோல் நோக்கி உதைந்த பந்து கோலின் வலது பக்க கம்பத்தில் பட்டு மிண்டும் மைதானத்திற்குள் வந்தது. 

அதன் பின்னரும் போர்த்துக்கல் வீரர்கள் அடுத்தடுத்து கோலுக்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டாலும் அவற்றை பெல்ஜியம் பின்கள வீரர்கள் தடுத்தனர். 

எனவே, போட்டி நிறைவில் தோகன் ஹசார்ட் பெற்ற ஒரே கோலினால் பிபா தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பெல்ஜியம், யூரோ நடப்புச் சம்பியன் போர்த்துக்கலை 1-0 என வீழ்த்தி, தோல்வி காணாத அணியாக தொடரின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

இதன்படி, பெல்ஜியம் அணி, காலிறுதியில் இத்தாலியை சந்திக்கவுள்ளது. 

முழு நேரம்: பெல்ஜியம் 1 – 0 போர்த்துக்கல்

கோல் பெற்றவர்கள்   

  • பெல்ஜியம் – Thorgan Hazard 42′ 

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<