T20‌ ‌உலகக்‌ ‌கிண்ணம்‌ ‌ஐக்கிய‌ ‌அரபு‌ ‌இராச்சியத்தில்‌ ‌

312
Getty Images

இந்த ஆண்டுக்கான (2021) T20 உலகக் கிண்ணம், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

2021ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம் இந்தியாவில் நடாத்த தீர்மானிக்கப்பட்ட போதும் அங்கே கொவிட்-19 வைரஸ் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, T20 உலகக் கிண்ணத்தினை வேறு நாடு ஒன்றில் நடாத்த பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே, அதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

T20 தொடரினைக் கைப்பற்றிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி

அதன்படி, மொத்தம் 16 அணிகள் பங்குபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரின் போட்டிகள் அனைத்தும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 14ஆம் திகதி வரையில் நடைபெறவிருக்கின்றது. 

இரண்டு சுற்றுக்களாக நடைபெறவுள்ள இந்த T20 உலகக் கிண்ணத் தொடரின், முதல் சுற்றில் 12 போட்டிகள் இடம்பெறவிருக்கின்றன. இதன் முதல் சுற்றில் இலங்கை, பங்களாதேஷ் அடங்கலாக 8 அணிகள் இரண்டு குழுக்களாக போட்டிகளில் மோதவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து, முதல் சுற்றின் ஒவ்வொரு குழுக்களிலும் இருந்து தலா இரண்டு அணிகள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, அவை T20 உலகக் கிண்ணத் தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேறவிருக்கின்றன. இதேவேளை, T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றின் போட்டிகளில் மாத்திரம் சில ஐக்கிய அரபு இராச்சியம் போன்று  மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஓமானிலும் நடைபெறும் என கூறப்படுகின்றது. 

PSL சம்பியன் கிண்ணத்தை முதல்முறை வென்ற முல்தான் சுல்தான்ஸ்

பின்னர், சுப்பர் 12 என அழைக்கப்படும் T20 உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாம் சுற்றில் 12 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மோதல்கள் நடைபெறவிருக்கின்றன. சுப்பர் 12 சுற்றில் இறுதிப்போட்டி, அரையிறுதிப்போட்டிகள் அடங்கலாக மொத்தம் 30 போட்டிகள் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம், கொவிட்-19 வைரஸ் அச்சம் காரணமாக இந்தியாவில் நடைபெற்று வந்த 2021ஆம் ஆண்டுக்கான இந்திய பிரிமியர் லீக் தொடரும், பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டிருந்ததோடு, அதன் எஞ்சிய போட்டிகளும் T20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தில் செப்டம்பர் 19ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 15ஆம் திகதி வரையில் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<