ஐசிசி உலக டெஸ்ட் சம்பியனாக முடிசூடியது நியூசிலாந்து!

ICC World Test Championship 2021

375
ICC

சர்வதேச கிரிக்கெட் வாரியம் முதன்முறையாக நடத்தி முடித்த ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின், சம்பியனாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி முடிசூடியுள்ளது.

இங்கிலாந்தின் சௌதம்டனில் உள்ள ஏஜஸ் போவ்ல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியானது, சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்றது. எனினும், துரதிஷ்டவசமாக முதல் நாள் ஆட்டம் சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டது.

இரண்டு‌‌ ‌‌உலகக்‌‌ ‌‌கிண்ண‌‌ ‌‌தொடர்களை‌‌ ‌‌நடத்த‌‌ ‌‌இலங்கை‌ ‌தயார்‌ ‌ ‌

இதனால், இரண்டாவது நாள் ஆரம்பிக்கப்பட்ட இந்தப்போட்டியில், மேலதிகமாக ஒதுக்கப்பட்ட நாள் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், நாணய சுழற்சியும் இரண்டாவது நாளில் மேற்கொள்ளப்பட்டது. நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று, களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி, களமிறங்கிய இந்திய அணி, விராட் கோஹ்லி மற்றும் அஜின்கியா ரஹானே ஆகியோரின் நிதான ஆட்டத்துடன் முன்னேறிய போதும், துரதிஷ்டவசமாக 217 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. எனினும், போட்டியின் இரண்டாவது நாள் 65வது ஓவருடன், போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட, மூன்றாவது நாள் ஆட்டநேரத்தின் போதே இந்த ஓட்ட எண்ணிக்கை பெறப்பட்டது.

இந்திய அணிசார்பாக அதிகபட்சமாக அஜின்கியா ரஹானே 49 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, நியூசிலாந்து அணியில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட கெயல் ஜெமிஸன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மறுபக்கம் நெயில் வெங்கர் மற்றும் ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் 2 விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

இந்திய அணியின் இந்த குறைந்த ஓட்ட எண்ணிக்கையை பலமாக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணியின் ஆரம்பம் சிறப்பாக இருந்த போதும், பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் மோசமான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 249 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு, சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 

நியூசிலாந்து அணியின் சார்பாக பெரிதும் துடுப்பாட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட டெவோன் கொன்வே 54 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, கேன் வில்லியம்ஸன் 49 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். நியூசிலாந்து அணி மூன்றாவது நாள் ஆட்டநேர நிறைவில் 102 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்த போதும், நான்காவது நாள் சீரற்ற காலநிலை காரணமாக முழுமையாக பாதிக்கப்பட்டது.

இந்திய அணியின் பந்துவீச்சில் மொஹமட் ஷமி 4 விக்கெட்டுகளையும், இசாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்த, ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர், தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி, 5வது நாள் ஆட்டநேர நிறைவில் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்ததுடன், மேலதிக தினமான ஆறாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. போட்டியானது அதிகமாக சமனிலையில் முடிவடைவதற்கான வாய்ப்புகள் இருந்த போதும், இந்திய அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

குறிப்பாக உணவு இடைவேளைக்கு பிறகு, வெறும் 170 ஓட்டங்களை பெற்றிருந்த இந்திய அணி, நியூசிலாந்து அணியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணிசார்பில் ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 41 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா  30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

வேகப்பந்து வீச்சின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்திருந்த நியூசிலாந்து அணிக்கு, மிகச்சிறந்த பெறுபேறு கிடைத்திருந்தது. குறிப்பாக, டிம் சௌதி 4 விக்கெட்டுகள், ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகள், கெயல் ஜெமிஸன் 2 விக்கெட்டுகள் மற்றும் நெயில் வெங்கர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர், 139 என்ற எட்டக்கூடிய வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி கேன் வில்லியம்ஸன் மற்றும் ரொஸ் டெய்லரின் மிகச்சிறந்த மூன்றாவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டத்துடன், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, முதல் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை கைப்பற்றியது. 

“நாம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை” – குசல் பெரேரா

நியூசிலாந்து அணிசார்பில் கேன் வில்லியம்ஸன் 52 ஓட்டங்களையும், ரொஸ் டெய்லர் 47 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொள்ள, ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரையிலும்,  மிகப்பெரிய கிண்ணங்களை வெல்லமால் காத்திருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி, பழமை வாய்ந்த டெஸ்ட் கிரிக்கெட்டின் மூலம், தங்களுடைய முதல் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சுருக்கம்

  • இந்தியா – 217/10 (92.1), அஜின்கியா ரஹானே 49, விராட் கோஹ்லி 44, கெயல் ஜெமிஸன் 31/5
  • நியூசிலாந்து – 249/10 (99.2), டெவோன் கொன்வே 54, கேன் வில்லியம்ஸன் 49, மொஹமட் ஷமி 31/4, இசாந்த் சர்மா 48/3
  • இந்தியா (2வது இன்னிங்ஸ்) – 170/10 (73), ரிஷப் பண்ட் 41, ரோஹித் சர்மா 30, டிம் சௌதி 48/4, ட்ரெண்ட் போல்ட் 39/3
  • நியூசிலாந்து (2வது இன்னிங்ஸ்) – 140/2 (45.5), கேன் வில்லியம்ஸன் 52*, ரொஸ் டெய்லர் 47*, ரவிச்சந்திரன் அஸ்வின் 17/2
  • முடிவு – நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<