உலக தரவரிசையில் 46ஆவது இடத்தைப் பிடித்த யுபுன் அபேகோன்

Road To Olympics - 2020

241

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக சர்வதேச மெய்வல்லுனர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய தரவரிசையின் படி இலங்கை வீரர் யுபுன் அபேகோன் 46ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். 

இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை அவர் மேலும் உறுதி செய்து கொண்டார்

காற்றின் வேகத்தினால் இலங்கை சாதனையை தவறவிட்டார் யுபுன்

ஆண்களுக்கான 100 மீட்டர் உலக தரவரிசையில் வீரர்களுக்கு புள்ளிகள் வழங்குவதில் முரண்பாடுகள் இருப்பதாகத் தெரிவித்து இலங்கை மெய்வல்லுனர் சங்கம், உலக மெய்வல்லுனர் சங்கத்திடம் கடிதம் மூலம் அறிவித்திருந்தது. 

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் பிரகாரம் நேற்றுவரை ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியின் வீரர்களுக்கான உலக தரவரிசையில் 50ஆவது இடத்தில் இருந்த இலங்கை வீரர் யுபுன் அபேகோன் புதிய தரவரிசைப்படி 46ஆவது இடத்தைப் பெற்று டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை மேலும் உறுதிசெய்து கொண்டார்.

முன்னதாக, டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதிபெறும் நோக்கில் கடந்த 19ஆம் திகதி ஸ்பெய்னின், மெட்ரிட் நகரில் நடைபெறவிருந்த சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் யுபுன் அபேகோன் பங்குபற்றிவிருந்தார்.

எனினும், போட்டி நடைபெறவிருந்த மைதானம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டதால் வீரர்களுக்கு வேகமாக ஓடுவதற்கு தடையாக இருக்கும் என தெரிவித்து அந்தத் தொடரில் பங்கேற்கவிருந்த பல முன்னணி வீரர்கள் விலகுவதாக அறிவித்தனர்.

ஒலிம்பிக் வாய்ப்புக்காக காத்திருக்கும் இலங்கை மெய்வல்லுனர்கள்

இதன்காரணமாக இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய யுபுன் அபேகோனும் அந்தத் தொடரிலிருந்து விலகிக் கொண்டார்.

இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டப் போட்டிக்காக உலக மெய்வல்லுனர் தரவரிசையின் படி 56 வீரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்

இவர்களுள் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான அடைவுமட்டாக அறிவிக்கப்பட்டுள்ள 10.05 செக்கன்கள் என்ற அடைவுமட்டத்தைப் பூர்த்தி செய்த 39 வீரர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதில் யுபுன் அபேகோன் 1203 புள்ளிகளுடன் உலக தரவரிசையில் 46ஆவது இடத்தில் இருப்பதால் அவருக்கு டோக்கியோ ஒலிம்பிக் வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

எதுஎவ்வாறாயினும், டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறுவதற்கான இறுதி திகதியாக எதிர்வரும் 29ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளதால், யுபுன் அபேகோனுக்கு இன்னுமொரு மெய்வல்லுனர் தொடரொன்றில் பங்குபற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மெய்வல்லுனர் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

டயமண்ட் லீக் பதக்கத்தை மயிரிழையில் தவறவிட்ட யுபுன் அபேகோன்

இதனிடையே, இலங்கையின் மற்றுமொரு ஒலிம்பிக் எதிர்பார்ப்பாக அமைந்துள்ள நிலானி ரத்நாயக்க, பெண்களுக்கான 3000 மீட்டர் தடைதாண்டல் உலக தரவரிசையில் 39ஆவது இடத்தில் உள்ளார். அவர் பங்குபற்றுகின்ற போட்டியில் 45 வீராங்கனைகளுக்கு ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

எனவே, எதிர்வரும் 29ஆம் திகதி வரை தனது இடத்தை நிலானி ரத்நாயக்க தக்கவைத்துக்கொள்வாரா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுஇவ்வாறிருக்க, அமெரிக்காவில் வசித்துவருகின்ற உயரம் பாய்தல் வீரர் ஷான் திவங்க, உலக தரவரிசையில் 51ஆவது இடத்தில் உள்ளார்

எனவே, ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற வேண்டுமானால் 29ஆம் திகதிக்கு முன்னர் 2.33 மீட்டர் ஒலிம்பிக் அடைவு மட்டத்தை அவர் பூர்த்தி செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் புள்ளிகளையாவது பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<