யூரோ 2020 கால்பந்து தொடரின் தமது முதல் போட்டிகளில் பலம் மிக்க ஸ்பெயின் அணியை சுவீடன் சமன் செய்ய, ஸ்லோவோக்கியா மற்றும் செக் குடியரசு அணிகள் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
யூரோ 2020 தொடரின் நான்காம் நாளுக்கான ஆட்டங்களாக திங்கட்கிழமை (14) இடம்பெற்ற போட்டிகளின் விபரங்களை கீழே பார்க்கலாம்.
ஸ்பெயின் எதிர் சுவீடன்
E குழுவுக்கான இரண்டாவது மோதலாக இடம்பெற்ற இந்த ஆட்டம் ஸ்பெயினின் செவில்லா நகரில் உள்ள Estadio de La Cartuja அரங்கில் ஆரம்பமானது. உலக தரவரியைில் ஆறாம் இடத்தில் இருக்கும் ஸ்பெயினுக்கு சுவீடன் வீரர்கள் கடுமையான போராட்டம் ஒன்றை காண்பித்தனர்.
சுவீடன் வீரர்கள் முதல் பாதி நிறைவில் கோலுக்குள் செலுத்திய பந்து பின்கள வீரர் லரொன்டெயின் காலில் பட்டு, வலது பக்க கம்பத்தில் பட்டு வெளியேறியது.
நெதர்லாந்து, ஆஸ்திரியா, இங்கிலாந்துக்கு முதல் வெற்றி
மறுமுனையில் ஸ்பெயின் வீரர்கள் கோலுக்காக எடுத்த பல முயற்சிகளை சுவீடன் கோல் காப்பாளர் ஒல்சென் சிறப்பாகத் தடுத்தார். எனவே, போட்டி கோல்கள் இன்றி நிறைவு பெற்றது.
முழு நேரம்: ஸ்பெயின் 0 – 0 சுவீடன்
போலந்து எதிர் ஸ்லோவோக்கியா
குழு E இற்கான முதல் ஆட்டமாக ரஷ்யாவின் செய்ண்ட் பீடர்ஸ்பேக் நகரில் உள்ள Krestovsky அரங்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் இறுதி 30 நிமிடங்களையும் 10 வீரர்களுடன் ஆடிய போலந்து அணி, குறித்த நேரத்தில் எதிரணிக்கு கோலைக் கொடுத்து தோல்வியடைந்தது.
ஆட்டம் ஆரம்பித்து 18ஆவது நிமிடத்தில் ஸ்லோவோக்கியா வீரர் மக் உதைந்த பந்து கோல் கம்பத்தில் பட்டு போலந்து கோல் காப்பாளர் Wojciech Szczęsny இன் உடம்பில் பட்டு ஓன் கோலாக மாறியது.
முதல் பாதியில் பின்னடைவில் இருந்து போலந்து அணி இரண்டாம் பாதி ஆரம்பமாகி ஒரு நிமிடத்தில் Karol Linetty மூலம் தமக்கான முதல் கோலைப் பெற்றது. எனினும், 62ஆவது நிமிடத்தில் அவ்வணி வீரர் Grzegorz Krychowiak இரண்டாவது மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு, சிவப்பு அட்டையுடன் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
எனவே, எதிரணி 10 வீரர்களுடன் ஆடிய சாதகத்தைப் பயன்படுத்தி Milan Škriniar மூலம் ஸ்லோவோக்கிய அணி தமக்கான வெற்றி கோலைப் பெற்றுக் கொண்டது.
முழு நேரம்: போலந்து 1 – 2 ஸ்லோவோக்கியா
கோல் பெற்றவர்கள்
- போலந்து– Karol Linetty 46’
- ஸ்லோவோக்கியா – Wojciech Szczęsny 18’ (OG), Milan Škriniar 69’
ஸ்கொட்லாந்து எதிர் செக் குடியரசு
ஸ்கொட்லாந்தின் ஹம்ப்டன் பார்க் அரங்கில் D குழுவுக்காக இடம்பெற்ற இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் தமது முதல் மோதலில் களமிறங்கின.
லுகாகுவின் இரட்டை கோல்களினால் பெல்ஜியம் இலகு வெற்றி
புன்டஸ்லிகா தொடரில் பயர் லெவெர்குசன் அணிக்காக ஆடும் முன்கள வீரர் பட்ரிக் சிக் போட்டியின் 42ஆவது நிமிடத்தில் கோபல் வழங்கிய பந்தை ஹெடர் செய்து செக் குடியரசிற்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.
மீண்டும் இரண்டாம் பாதி ஆரம்பமாகி 7 நிமிடங்களில் பட்ரிக் சிக் மைதானத்தின் மத்தியில் இருந்து நீண்ட தூரத்திற்கு உதைந்து எதிரணியின் கோல் காப்பாளருக்கு மேலால் பந்தை கம்பங்களுக்குள் செலுத்தி தனது அடுத்த கோலையும் பதிவு செய்தார். இந்த கோல் யூரோ 2020 இல் இதுவரை பெறப்பட்ட சிறந்த கோலாக அமைந்தது.
போட்டியில் அதிக வாய்ப்புக்களை ஸ்கொட்லாந்து அணி பெற்றாலும் அவர்களால் கோல்கள் எதனையும் பெற முடியாமல் போனது. போட்டி நிறைவில் மேலதிக இரண்டு கோல்களினால் வெற்றி பெற்ற செக் குடியரசு D குழுவில் முதல் இடத்திற்கு முன்னேறியது.
முழு நேரம்: ஸ்கொட்லாந்து 0 – 2 செக் குடியரசு
கோல் பெற்றவர்கள்
- செக் குடியரசு – பட்ரிக் சிக் 42’ & 52’
>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<