ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்த இலங்கையின் மில்கா கிஹானி

Tokyo Olympics - 2021

371

இலங்கையின் கனிஷ்ட ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்கா கிஹானி, 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளார். 

ஓலிம்பிக் அடைவுமட்டத்தைப் பூர்த்தி செய்யத் தவறிய வீரர்களுக்கான வைல்ட் கார்ட் முறையில் மில்கா கிஹானிக்கு இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா தெரிவித்தார்.

இதன்படி, மில்கா கிஹானிக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான அனுமதியை டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்காவுக்கு ஒலிம்பிக் வரம் கிடைக்குமா?

இம்மாதம் 29ஆம் திகதி நடைபெறவிருந்த ஆசிய கனிஷ் ஜிம்னாஸ்டிக் போட்டித் தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, மில்கா கிஹானிக்கு டோக்கியோ ஒலிம்பிக் வரம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், ஜிம்னாஸ்டிக் வீரர்களுக்கான உலக தரவரிசையின் படி, மில்கா கிஹானி தற்போது ஆசிய வலயத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன், இந்தியாவின் ப்ரான்தி நாயக் இரண்டாவது இடத்தில் உள்ளார்.  

எனவே, உலக ஜிம்னாஸ்டிக் சம்மேளனம் ஆசிய வலய நாடுகளின் தரவரிசையை அடிப்படையாக வைத்து மில்காவுக்கும், இந்திய வீராங்கனைக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

ஒலிம்பிக் செல்லும் இலங்கையர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

அதுமாத்திரமின்றி, ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றுகின்ற நாடுகளினால் வழங்கப்படுகின்ற விசேட புள்ளிகள் அடிப்படையிலும், ஆசிய நாடுகளுக்கான கோட்டாவின் கீழும் மில்காவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதன்மூலம் இம்முறை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது இலங்கையர் என்ற பெருமையை மில்கா கிஹானி பெற்றுக்கொண்டார்

அத்துடன், ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்துகொள்ளும் முதலாவது இலங்கையர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுவீடனில் வளர்ந்து இலங்கை சார்பாக ஒலிம்பிக் செல்லும் மெட்டில்டா கார்ல்சன்

இதற்கு முன்னர் குதிரை சவாரி போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை சார்பில் மெட்டில்டா கார்ல்சன் ஒலிம்பிக்கிற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புலமைப்பரிசிலின் கீழ் மில்கா கிஹானி தற்போது ஜப்பானில் பயிற்சிகளை பெற்று வருகின்றதுடன், இறுதியாக 2019இல் ஜப்பானில் நடைபெற்ற உலக ஜிம்னாஸ்டிக் போட்டித் தொடரிலும் இலங்கை சார்பாக போட்டியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க …