கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்ட ஷிரான் பெர்னாந்து

242

பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான இலங்கை குழாத்தில் உள்வாங்கப்பட்டிருந்த அறிமுக வேகப்பந்துவீச்சாளரான ஷிரான் பெர்னாந்து கொவிட்-19 வைரஸ் தொற்றில் இருந்து விடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

திட்டமிட்டபடி இலங்கை – பங்களாதேஷ் தொடர் நடைபெறும்

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கிற்காக மோதும் ஒருநாள் தொடர் தற்போது பங்களாதேஷில் நடைபெற்று வருகின்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே, இரண்டு போட்டிகள் நிறைவடைந்து இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க பங்களாதேஷ் தொடரினை 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது. 

இந்த சந்தர்ப்பத்தில் இந்த ஒருநாள் தொடர் ஆரம்பமாக முன் இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்சியாளர் சமிந்த வாஸ், இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான இசுரு உதான மற்றும் ஷிரான் பெர்னாந்து ஆகியோருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருந்தது. 

இதனால், இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் ஆரம்பமாகுவது சந்தேகத்திற்கிடமான நிலை ஒன்று உருவானது. எனினும், பின்னர் மேற்கொண்ட PCR பரிசோதனைகளுக்கு அமைய சமிந்த வாஸ் மற்றும் இசுரு உதான ஆகியோருக்கு கொவிட்-19 தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டு தொடர் ஆரம்பமானது. ஆனால், குறித்த PCR பரிசோதனைகளில் ஷிரான் பெர்னாந்துவிற்கு கொவிட்-19 தொற்று தொடர்ந்தும் இருப்பது கண்டறியப்பட அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்தார். 

Video – இலங்கை வீரர்களின் ஒப்பந்த பட்டியல்: யாருக்கு அதிக சம்பளம்?

இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட ஷிரான் பெர்னாந்து நேற்றைய தினம் (27) வைத்திய அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைக்கு முகம் கொடுத்திருந்தார். இந்த பரிசோதனைகளின் போதே அவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டிருக்கின்றது. 

அதேநேரம், கொவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதனை அடுத்து ஷிரான் பெர்னாந்து இலங்கை அணியுடன் இணைந்து பயிற்சிகளை ஆரம்பிக்கவிருப்பதாக Cricbuzz இணையதளம் குறிப்பிட்டிருக்கின்றது. 

இதேநேரம், இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நாளை (28) டாக்காவில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…