பங்களாதேஷில் வைத்து நடத்தப்பட்ட உடற்தகுதி பரிசோதனையில், இலங்கை குழாத்தின் இரண்டு வீரர்கள் உடற்தகுதியை நிரூபிக்க தவறியுள்ளதாக இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் பெரேரா தெரிவித்தார்.
இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக பங்களாதேஷ் சென்றுள்ளது. இந்தப்போட்டித்தொடர் நாளைய தினம் (23) ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் ஒப்பந்தத்தை நிராகரித்த வீரர்கள்
குறித்த இந்தப் போட்டி தொடரின் முதல் போட்டிக்கான ஊடவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் (22) நடைபெற்றது. குறித்த சந்திப்பின் போது, பங்களாதேஷில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணிக்கு உடற்தகுதி பரிசோதனை நடத்தப்பட்டதாக குசல் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், தொடரொன்றின் போது, இவ்வாறான உடற்தகுதி பரிசோதனையை நடத்தியதால், வீரர்கள் சற்று கடினமாக உணர்ந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
“உடற்தகுதி பரிசோதனை ஒன்று எமக்கு நடத்தப்பட்டது. தொடரொன்றின் போது, இவ்வாறு உடற்தகுதி பரிசோதனை நடத்தியமை தொடர்பில், வீரர்களிடமும் கருத்துக்கள் இருக்கின்றன. குறித்த இந்த உடற்தகுதி பரிசோதனை பங்களாதேஷ் தொடருக்காக நடத்தப்படவில்லை. இந்த தொடருக்கான உடற்தகுதி பரிசோதனை நாட்டில் வைத்து மேற்கொண்டிருந்தோம். மற்றுமொரு உடற்தகுதி பரிசோதனை உள்ளது என கூறினர்.
நடத்தப்பட்ட இந்த உடற்தகுதி பரிசோதனை இங்கிலாந்து மற்றும் அதற்கு பிற்பட்ட 3 மாதங்களுக்கு வரும் தொடர்களுக்காக நடத்தப்பட்டது. இதில், இரண்டு வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் உடற்தகுதியை நிரூபிக்கவில்லை. அவர்கள் இருவரும் நாட்டுக்கு வருகைத்தந்த பின்னர், உடற்தகுதியை நிரூபித்து, அடுத்து வரும் தொடர்களில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியும்” என குறிப்பிட்டிருந்தார்.
நாளைய தினம் நடைபெறவுள்ள போட்டி தொடர்பில் குறிப்பிட்டிருந்த குசல் பெரேரா, பங்களாதேஷ் அணி பலமான அணியெனவும், சொந்த மண்ணில் விளையாடுவதால், அவர்களுக்கான சாதகத்தன்மை அதிகம் எனவும் சுட்டிக்காட்டினார்.
“பங்களாதேஷ் அணி மிகச்சிறந்த வலிமைக்கொண்ட அணி. அவர்களுடைய சொந்த மண்ணில் விளையாடுவது அவர்களுக்கு மேலும் பலத்தை அதிகரிக்கும்.
எனினும் நாம் வழமையாக எம்முடைய பலத்தை கொண்டும், அச்சமின்றிய கிரிக்கெட்டை ஆடுவதற்கும் எதிர்பார்க்கிறோம். இவற்றை கொண்டு களமிறங்குவதுடன், எம்முடைய திட்டங்களை மைதானத்தில் செயற்படுத்த எதிர்பார்ப்போம்“
அதேநேரம், இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு இளம் அணியொன்றை வழங்கியுள்ளதாகவும், அவர்களைக்கொண்டு சிறப்பாக விளையாட எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இம்முறை களத்தடுப்பில் பாரிய முன்னேற்றத்தை காணமுடியும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, சமனிலையாக அணியொன்றை பெயரிடும் பட்சத்தில், நிரோஷன் டிக்வெல்லவுக்கு அணியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக காணப்படுகின்ற போதும், தொடர்ச்சியாக பிரகாசித்துவரும் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுக்க எண்ணுவதாகவும் குசல் பெரேரா குறிப்பிட்டிருந்தார்.
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி, நாளைய தினம் (23) தினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<