பல்வேறு காரணங்களைக் காட்டி இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் 24 பேர், இலங்கை கிரிக்கெட் சபையினுடைய (SLC) வருடாந்த வீரர்கள் ஒப்பந்தத்தை நிராகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தெரிவு
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் 24 பேர் வருடாந்த வீரர்கள் ஒப்பந்தத்தை நிராகரித்த விடயம், குறித்த வீரர்கள் சார்பிலான சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமரட்ன வெளியிட்ட ஊடக அறிக்கையின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
அதன்படி சம்பளக் குறைப்பு, வீரர்களின் சம்பளப் பட்டியலை பொது மக்களுக்கு பகிரங்கமாக வெளியிட்டமை, சர்வதேச அமைவுகளுக்கு ஏற்றாற் போல் சம்பளம் வழங்காமை மற்றும் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டமை போன்ற விடயங்களை பிரதான அடிப்படையாக வைத்தே வீரர்கள், இலங்கை கிரிக்கெட் சபையினுடைய வருடாந்த ஒப்பந்தத்தை நிராகரித்திருப்பதாக அறியக்கிடைத்திருக்கின்றது.
இன்னும், முன்னர் அறிவிக்கப்பட்டதற்கு அமைய வீரர்களின் திறமைக்கேற்ப சம்பளக் கொடுப்பனவு வழங்கப்படும் என குறிப்பிட்டதன் படி, வீரர்களின் திறமையினை மதிப்பிட எந்தவித அறிவிப்புக்களும் இதுவரை வீரர்கள் எவருக்கும் வழங்கப்படவில்லை எனவும் குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், கட்டாயமான முறையில் வீரர்களுக்கு வருடாந்த ஒப்பந்தம் திணிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அது துப்பாக்கி முனையில் வீரர்களை வைத்திருப்பதற்கு ஒப்பாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றமை குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
Video – குசல் தலைவராக நியமிக்கப்பட்டதற்கான காரணம் என்ன?
அதோடு, இந்த ஊடக அறிக்கையில் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி. இன்) தரவரிசைகளில் இலங்கை பின்னடைந்து சென்றமைக்கு வீரர்கள் மாத்திரம் முழுப் பொறுப்பு அல்ல எனவும் கூறப்பட்டிருக்கின்றது.
எனினும், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சார்பிலான இந்த ஊடக அறிக்கைக்கு இலங்கை கிரிக்கெட் சபையானது உத்தியோகபூர்வ பதில் எதனையும் இன்னும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமரட்ன சார்பிலான இலங்கை வீரர்கள் – திமுத் கருணாரத்ன, அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், சுரங்க லக்மால், குசல் பெரேரா, தசுன் ஷானக்க, தனன்ஞய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, குசல் மெண்டிஸ், வனிந்து ஹஸரங்க, லசித் எம்புல்தெனிய, பெதும் நிஸ்ஸங்க, லஹிரு திரிமான்ன, துஷ்மந்த சமீர, கசுன் ராஜித, லக்ஷான் சந்தகன், விஷ்வ பெர்னாந்து, இசுரு உதான, ஒசத பெர்னாந்து, ரமேஷ் மெண்டிஸ், லஹிரு குமார, தனுஷ்க குணத்திலக்க, அஷேன் பண்டார, அகில தனன்ஞய
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<