ஐ.பி.எல். தொடரில் விளையாடிவரும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய தலைவராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளதாக, அணி நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
டேவிட் வோர்னர், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின், தலைவராக செயற்பட்டுவந்த நிலையில், நாளை நடைபெறவுள்ள ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலிருந்து, கேன் வில்லியம்சன் தலைவராக செயற்படவுள்ளார்.
வீரர்களைத் தொடர்ந்து IPL தொடரிலிருந்து விலகும் நடுவர்கள்
சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி, இம்முறை ஐ.பி.எல். தொடரில் 6 போட்டிகளில் விளையாடி, ஒரு வெற்றியை மாத்திரமே பெற்றிருக்கின்றது. இதன் காரணமாவும், அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்களை மாற்றி பயன்படுத்தும் முகமாகவும் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நாளை நடைபெறவுள்ள எமக்கான போட்டியில், அணித்தலைவராக கேன் வில்லியம்சன் செயற்படவுள்ளார் என்பதுடன், தொடர்ந்தும் இந்த பருவகாலம் முழுவதும் தலைவராக இவர் செயற்படுவார் என்பதையும் அறிவித்துக்கொள்கிறோம்.
ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான நாளைய போட்டியில், வெளிநாட்டு வீரர்களில் மாற்றங்களை ஏற்படுத்த அணி முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது. இந்த முடிவை கருத்திற்கொண்டு நாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம்.
நாம் மேற்கொண்டிருக்கும் இந்த தீர்மானம் இலகுவானதல்ல. கடந்த பருவகாலங்களில், டேவிட் வோர்னர் எமக்கு மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். எனவே, இனிவரும் காலங்களில் மைதானத்துக்குள்ளும், வெளியிலும் டேவிட் வோர்னர் எமக்கான ஆதரவை வழங்குவார் என எதிர்பார்க்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
டேவிட் வோர்னர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தடைக்கு முகங்கொடுத்திருந்த போது, கேன் வில்லியம்சன் ஹைதராபாத் அணியின் தலைவராக செயற்பட்டிருந்தார். இந்தநிலையில், மீண்டும் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…