றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் முன்னாள் தென்னாபிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ், ஐ.பி.எல். தொடரில் 5000 ஓட்டங்களை குவித்த இரண்டாவது வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை பதிவுசெய்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டு, விளையாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பாக, 42 பந்துகளில் 75 ஓட்டங்களை வில்லியர்ஸ் குவித்திருந்தார்.
இந்திய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பட் கம்மின்ஸ்
குறித்த இந்த இன்னிங்ஸின் போது, ஐ.பி.எல். தொடரில் 5000 ஓட்டங்களை ஏபி டி வில்லியர்ஸ் கடந்துள்ளார். மொத்தமாக 161 இன்னிங்ஸ்களில் இந்த ஓட்ட எண்ணிக்கையை ஏபி டி வில்லியர்ஸ் கடந்து சாதனை படைத்துள்ளார்.
அதேநேரம், ஐ.பி.எல். தொடரில் இதற்கு முதல் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் டேவிட் வோர்னர் 5000 ஓட்டங்களை கடந்திருந்ததுடன், குறித்த ஓட்ட எண்ணிக்கையை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். இவர், 147 இன்னிங்ஸ்களில் 5390 ஓட்டங்களை குவித்துள்ளார்.
இந்தநிலையில், 5000 ஓட்டங்களை கடக்கும் இரண்டாவது வெளிநாட்டு வீரர் என்ற சாதனை பட்டியலில், ஏபி டி வில்லியர்ஸ் இணைந்துள்ளார். அதுமாத்திரமின்றி, ஐ.பி.எல். தொடரில் 5000 ஓட்டங்களை கடந்த 6வது வீரர் என்ற பெருமையையும் இவருக்கு கிடைத்துள்ளது.
குறித்த இந்தப்பட்டியலில், 6041 ஓட்டங்களை குவித்துள்ள விராட் கோஹ்லி முதலிடத்தில் உள்ளதுடன், இதற்கு அடுத்தப்படியாக சுரேஸ் ரெய்னா, ஷிக்கர் தவான், ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இதேவேளை, நேற்று நடைபெற்ற போட்டியில், ஏபி டி வில்லியர்ஸின் 75 ஓட்டங்களின் உதவியுடன், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியை ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…