IPL தொடரிலிருந்து விலகும் ரவிச்சந்திரன் அஸ்வின்!

Indian Premier League 2021

239
IPLT20.COM

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொவிட்-19 தொற்றின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், தன்னுடைய குடும்பத்துடன் இருக்கவேண்டியது அவசியமாகியுள்ளதால், ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் கருத்து பகிர்ந்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், 

கொரோனாவிலிருந்து மீண்டார் அக்ஷர் பட்டேல்

“ஐபிஎல் தொடரிலிருந்து நாளை முதல் நான் விடைபெற்றுக் கொள்கிறேன். கொவிட்-19 தொற்றுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வருகின்றனர்.  இவ்வாறான கடினமான நேரத்தில் அவர்களுடன் இருப்பது அவசியம். அனைத்து விடயங்களும் சரியான திசையில் பயணித்தால் நான் மீண்டும் அணியில் இணைவதற்கு எதிர்பார்க்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் நேற்றைய தினம் நடைபெற்ற சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியிருந்தார். இந்தப்போட்டியில் சுப்பர் ஓவர் மூலம் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி வெற்றிபெற்றிருந்தது. இந்தப்போட்டியை தொடர்ந்து அஸ்வின் அணியிலிருந்து விலகியுள்ளார்.

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியிலிருந்து அஸ்வின் வெளியேறியுள்ள நிலையில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிலிருந்து அவுஸ்திரேலியாவின் இரண்டு வீரர்கள் விலகியுள்ளனர்.

சுழல்பந்துவீச்சாளர் அடம் ஷாம்பா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் கேன் ரிச்சட்சன் ஆகியோர், ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இவர்கள் தனிப்பட்ட காரணத்துக்காக வெளியேறியுள்ளதாக றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, “அடம் ஷாம்பா மற்றும் கேன் ரிச்சட்சன் ஆகியோர் அணியிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுகின்றனர். அவர்கள், இனிவரும் போட்டிகளில் விளையாட மாட்டார்கள். அவர்களின் இந்த முடிவுக்கு, அணியென்ற ரீதியில் எங்களால் முடிந்த அனைத்து ஆதரவையும் வழங்குவோம்” என குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணி வீரர்களான கேன் ரிச்சட்சன் மற்றும் அடம் ஷாம்பா ஆகியோர் விலகியுள்ளதுடன், இதற்கு முதல் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியிலிருந்த வேகப்பந்துவீச்சாளர் என்ரு டை விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<