வடமாகாண சம்பியனாகிய ஆவரங்கால் இந்து இளைஞர் கழகம்

Dialog President Gold Cup Volleyball Championship

223

வட மாகாணத்துக்கான டயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் சம்பியன் கிண்ணத்தை ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டு கழகம் வெற்றிக்கொண்டது. 

புத்தூர் கலைமைதி மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில், ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டு கழகம், ஆவரங்கால் மத்திய அணியை 3-0  என வீழ்த்தி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

விறுவிறுப்புடன் ஆரம்பித்த ஜப்னா வொலிபோல் லீக்!

முன்னர்  நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டு கழகம், தொண்டமனாறு கலையரசி விளையாட்டு கழகத்தை எதிர்கொண்டு விளையாடியதுடன், போட்டியை 3-0 என வெற்றிக்கொண்டது.

மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில், புத்தூர் வளர்மதி அணியை எதிர்கொண்டு விளையாடிய ஆவரங்கால் மத்திய அணி 3-1 என்ற செட்கள் கணக்கில் வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது.

இவ்வாறு இலகுவான வெற்றிகளுடன் இறுதிப் போட்டிக்கு ஆவரங்கால் மத்திய அணி மற்றும் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டு கழகம் என்பன இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தன. எனினும், இறுதிப்போட்டியில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டு கழகம் இலகு வெற்றியை பதிவுசெய்தது.

போட்டியின் முதல் செட் மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பித்தது. ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டு கழகம் முதல் செட்டை 29-27  என கைப்பற்றியது. முதல் செட் இவ்வாறு விறுவிறுப்பாக ஆரம்பித்த போதும், அடுத்த இரண்டு செட்களையும் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டு கழக அணி 25-18 மற்றும் 25-21 என இலகுவாக கைப்பற்றி சம்பியனாகியது.

அதேநேரம், பெண்களுக்கான இறுதிப் போட்டியில் கிளிநொச்சி அதிசயம் விளையாட்டுக் கழகம், கரவெட்டி கருனாகரன் அணியை 2:0 என்ற நேர் செட்களினால் வீழ்த்தி வடமாகாண சம்பியனாகியது.

இதேவேளை, வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, டயலொக் ஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரில், 31 ஆண்கள் அணிகள் மற்றும் 9 பெண்கள் அணிகள் மோதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க…