நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைக் குவித்த அணி என்ற வரலாற்றுச் சாதனையை அவுஸ்திரேலிய மகளிர் அணி படைத்தது.
மெக்லானிங் தலைமையிலான அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகின்றது.
இதில் முதலாவது ஒருநாள் போட்டி மவுன்ட் மவுங்கானுய் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (4) நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய பெண்கள் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
ஹட்ரிக் சம்பியன் பட்டம் வெல்லுமா மும்பை இந்தியன்ஸ்?
இதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து மகளிர் அணி, 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்ப வீராங்கனை லவ்ரன் டௌன் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 90 ஓட்டங்களையும், அமேலியா கேர் 33 ஓட்டங்களையும், அமி செட்டர்த்வெய்ட் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மெகான் ஷுட் 32 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும், நிக்கோலா கேரி 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
213 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா மகளிர் அணி, 38.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 215 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணையும் ஜேசன் ரோய்
அலிசா ஹீலி (65), எலிஸ் பெரி (56), ஏஷ்லி கார்ட்னர் (53) ஆகிய மூவரும் அரைச் சதங்கள் குவித்து அவுஸ்திரேலியாவின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தனர்.
இந்த வெற்றிமூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1 – 0 என அவுஸ்திரேலியா மகளிர் அணி முன்னிலை வகிக்கின்றது.
இதனிடையே, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவுஸ்திரேலிய மகளிர் அணி தொடர்ச்சியாகப் பெற்ற 22ஆவது வெற்றி இதுவாகும்.
அத்துடன், ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் இது புதிய உலக சாதனையாகவும் இடம்பிடித்தது. இதற்கு முன்பு ரிக்கி பாண்டிங் தலைமையிலான அவுஸ்திரேலிய ஆடவர் அணி ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 21 போட்டிகளில் (2003ஆம் ஆண்டு) வென்றதே உலக சாதனையாக இருந்தது.
இதன்படி, சுமார் 18 ஆண்டுகால உலக சாதனையை அந்த நாட்டு மகளிர் அணி முறியடித்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
Video – தேசிய மரதன் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதித்த தமிழர்கள்.!|Sports RoundUp – Epi 155
அதுமாத்திரமின்றி, அவுஸ்திரேலிய மகளிர் அணி கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு நடைபெற்ற எந்தவொரு ஒருநாள் போட்டியில் கூட தோல்வியைச் சந்தித்ததில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதில் 2018ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்திய மகளிர் அணிக்கு எதிராக (3-0) வெற்றி, அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் வெற்றி, தொடர்ந்து நியூசிலாந்து (3-0), இங்கிலாந்து (3-0), மேற்கிந்தியத் தீவுகள் (3-0), இலங்கை (3-0) அணிகளுக்கு எதிராக வெற்றிபெற்றது. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளில் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றுள்ளது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…