பெதும் நிஸ்ஸங்கவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

Sri Lanka tour of West Indies 2021

326

மேற்கிந்திய தீவுகள் தொடரில் விளையாடிவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க, தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில், முதல் சதத்தை பதிவுசெய்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் வரலாற்றை பொருத்தவரை, கன்னி டெஸ்ட் போட்டியில் சதமடித்த முன்னணி வீரர்களான ப்ரெண்டன் குருப்பு, ரொமேஷ் களுவிதாரன மற்றும் திலான் சமரவீர ஆகியோரின் பட்டியலில், நான்காவது வீரராக பெதும் நிஸ்ஸங்க இணைந்துள்ளார்.

ரசிகர்களின் அன்பைக்கண்டு கண்ணீர் விட்ட சனத் ஜயசூரிய

அதுமாத்திரமின்றி மேற்குறித்த வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த மண்ணில் இந்த சாதனையை பதிவுசெய்திருந்த போதும், பெதும் நிஸ்ஸங்க வெளிநாட்டு மண்ணில் சதமடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இவ்வாறு முதல் போட்டியில் திறமையை வெளிப்படுத்திய இலங்கை அணியின் இளம் வீரரான பெதும் நிஸ்ஸங்கவுக்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களும், தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள டொம் மூடி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பெதும் நிஸ்ஸங்கவுக்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன, கடந்த மூன்று ஆண்டுகளாக முதற்தர கிரிக்கெட்டில் 67 ஓட்டங்களை சராசரியாக கொண்டிருந்ததுடன், இறுதியாக கிடைத்த வாய்ப்பில், கடினமான சதம் ஒன்றை பெற்றுக்கொண்ட பெதும் நிஸ்ஸங்கவுக்கு வாழ்த்துக்கள்என தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேநேரம், இலங்கை அணியில் விளையாடுவதற்கு முன்னணி கழகங்கள் தேவையில்லை எனவும், ஓட்டங்களை குவிப்பதும் விக்கெட்டுகளை கைப்பற்றுவதுமே தேவையான விடயம் எனவும் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரசல் ஆர்னல்ட் பதிவிட்டுள்ளதுடன், பெதும் நிஸ்ஸங்கவுக்கு வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.

அவர் பெதும் நிஸ்ஸங்கவுக்கான தனது வாழ்த்தில், வாழ்த்துக்கள் பெதும் நிஸ்ஸங்க. தொடர்ந்து ஓட்டங்களை குவிக்க வேண்டும். இதுபோன்ற பல சதங்களை குவிக்க முடியும் என நம்புகிறேன்” என வாழ்த்தியுள்ளார்.

மற்றுமொரு டுவிட்டர் பதிவில், மலை போன்ற ஓட்டக்குவிப்புக்கு பின்னர், பலமான தன்மையை வெளிப்படுத்தும் பெதும் நிஸ்ஸங்கவுக்கு வாழ்த்துக்கள். இலங்கை அணியில் விளையாட வேண்டும் என்றால் ஓட்டங்களை குவித்தும், விக்கெட்டுகளை கைப்பற்றியும் தாங்களை நிரூபிக்க வேண்டும். ஏனைய கழகங்களுக்கு சென்று நிரூபிக்க வேண்டியதில்லை. எனவே, தொடர்ந்தும் பெதும் நிஸ்ஸங்க NCC கழகத்தில் விளையாடுவார் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள டொம் மூடி, பெதும் நிஸ்ஸங்கவுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், மேலும் இதுபோன்ற சதங்களை பெறவேண்டும் எனவும், இலங்கை அணிக்கு இந்தப் போட்டியில் வெற்றிபெறும் வாய்ப்பு கிட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கை அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரர் பர்விஸ் மஹ்ரூபின் பதிவில், டெஸ்ட் போட்டியில் சதம் பெறுவது விஷேடமானது. அதுவும், முதல் போட்டியில் சதம் பெறுவது மிகவும் விஷேடமானதாகும். பெதும் நிஸ்ஸங்கவின் திறமை முன்மாதிரியானது என்பதுடன், அவர் மிகவும் அமைதியானர் என மஹ்ரூப் பதிவிட்டுள்ளதுடன், இலங்கை அணியின் பிரகாசிப்பையும் வாழ்த்தியுள்ளார்.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று (25) நடைபெறவுள்ளதுடன், மே.தீவுகள் அணியின் வெற்றிக்கு 341 ஓட்டங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…