IPL தொடரிலிருந்தும் நீக்கப்படும் ஸ்ரேயாஷ் ஐயர்?

England tour of India 2021

314

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது, தோற்பட்டை உபாதைக்கு முகங்கொடுத்த இந்திய வீரர் ஸ்ரேயாஷ் ஐயர், ஒருநாள் தொடரிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ள ஸ்ரேயாஷ் ஐயர், அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரின் ஒரு பகுதியை தவறவிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

அறிமுக டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த பெதும் நிசங்க

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி களத்தடுப்பில் ஈடுபட்டது. இதன்போது, இந்திய அணி வீசிய 8வது ஓவரின் போது, பந்தினை தடுக்க முயன்ற ஸ்ரேயாஷ் ஐயரின் இடது தோற்பட்டையில் கடுமையான உபாதை ஏற்பட்டது. இதன்காரணமாக அவர் மைதானத்திலிருந்து வெளியேறினார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், தோற்பட்டை சற்று விலகியிருப்பது உறுதிசெய்யப்பட்டது. எனவே, அவர் மீதமுள்ள ஒருநாள் போட்டிகளில் விளையாடமாட்டார் என இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்திய அணியில் விளையாடுவதை தவிர்த்து, அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடரில், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக ஸ்ரேயாஷ் ஐயர் செயற்படவுள்ளார். இந்தநிலையில், தற்போது ஏற்பட்டுள்ள உபாதையின் அடிப்படையில், ஐ.பி.எல். தொடருக்கு சரியான உடற்தகுதி பெறுவரா? என்பது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.

ஐ.பி.எல். தொடரின் ஒரு பகுதியில் ஸ்ரேயாஷ் ஐயர் விளையாடாமல் இருந்தாலும், புதிய தலைவரை நியமிக்கவேண்டிய நிலை டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு ஏற்படும். அதன்படி ரிஷப் பண்ட், ஸ்டீவ் ஸ்மித், ஷிக்கர் தவான் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரில் ஒருவர் புதிய தலைவராக நியமிக்கப்படலாம்.

ஸ்ரேயாஷ் ஐயர் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள அதேபோட்டியில், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியில் விளையாடவுள்ள செம் பில்லிங்ஸும் உபாதைக்கு உள்ளாகியுள்ளார். இந்தநிலையில், இவரது உபாதை குறித்த மேலதிக தகவல்களுக்காக டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, நாளைய தினம் (26) நடைபெறவுள்ளது. ஸ்ரேயாஷ் ஐயர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<