வீதி பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்று வரும், வீதி பாதுகாப்பு உலக T20 தொடரில், பங்களாதேஷ் லெஜன்ட்ஸ் அணியை 42 ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை லெஜன்ட்ஸ் அணி தொடரில் நான்காவது வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
ராய்பூர் நகரில் புதன்கிழமை (10) ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் தலைவர் திலகரட்ன டில்ஷான் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காகப் பெற்றார்.
பின்னர், தமது கடைசிப் போட்டியில் தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் அணிக்கு எதிராக இலகு வெற்றியினைப் பதிவு செய்த இலங்கை லெஜன்ட்ஸ் அணி முதல் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது.
இலங்கை லெஜன்ட்ஸ் சார்பில் அணித்தலைவர் திலகரட்ன டில்ஷான் சிறந்த ஆரம்பத்தினைக் காட்டி 23 பந்துகளில் 33 ஓட்டங்களைப் பெற்ற போதும், ஏனைய ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான சனத் ஜயசூரிய 04 ஓட்டங்களை பெற்ற சந்தர்ப்பத்தில் உபாதையின் காரணமாக மைதானத்தினை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது.
எனினும், புதிய வீரராக களம் வந்த உபுல் தரங்கவின் அசத்தல் துடுப்பாட்டத்தோடு இலங்கை லெஜன்ட்ஸ் அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில், சதத்தினை ஒரு ஓட்டத்தினால் தவறவிட்டிருந்த உபுல் தரங்க ஆட்டமிழக்காமல் 47 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 99 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
>> T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறிய சந்தகன்
பங்களாதேஷ் லெஜன்ட்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் ரஜின் சாலே, மொஹமட் சரிப் மற்றும் அணித்தலைவர் மொஹமட் ரபிக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 181 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் லெஜன்ட்ஸ் அணியினர், 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவினர்.
பங்களாதேஷ் லெஜன்ட்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் நஷிமுடின் அரைச்சதம் ஒன்றுடன் 41 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்களை பதிவு செய்திருந்தார்.
இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில், வெற்றியினை உறுதி செய்த அணித்தலைவர் திலகரட்ன டில்ஷான் 3 விக்கெட்டுக்களையும், தம்மிக்க பிரசாத் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.
போட்டியின் ஆட்டநாயகன் விருதினை இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் உபுல் தரங்க பெற்றுக்கொண்டார்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை லெஜன்ட்ஸ் – 180/6 (20) உபுல் தரங்க 99*, திலகரட்ன டில்ஷான் 33, மொஹமட் ரபிக் 24/1
பங்களாதேஷ் லெஜன்ட்ஸ் – 138/6 (20) நஷிமுடின் 54, திலகரட்ன டில்ஷான் 21/3, தம்மிக்க பிரசாத் 22/2
முடிவு – இலங்கை லெஜன்ட்ஸ் அணி 42 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு <<