உலகிலேயே அதிசிறந்த வீரராக வேண்டும் என்பதே எனது ஆசை – கிறிஸ் கெயில்

273
Chris Gayle

மேற்கிந்திய தீவுகள் அணி மூன்றாவது தடவையாக T20 உலகக் கிண்ண தொடரில் வெற்றி பெற வேண்டும் என்றும், அதற்கு தான் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கிறிஸ் கெயில் விருப்பம் தெரிவித்துள்ளார்.  

கடந்த 2019ஆம் ஆண்டுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படாமல் இருந்த கிறிஸ் கெயிலுக்கு இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள T20 தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.  

>> கெய்ல் இலங்கைக்கு எதிராக களமிறங்கும் வாய்ப்பு!

13 வீரர்களைக் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் குழாத்தில் இடம்பெறும் நான்கு ஆரம்ப வீரர்களில் கிறிஸ் கெயிலும் ஒருவர். அவருடன் எவின் லூயிஸ், லெண்ட்ல் சிம்மன்ஸ், அண்ட்ரே ப்ளெச்சர் ஆகியோரும் ஆரம்ப வீரர்களாக குழாத்தில் இடம்பெற்றுள்ளனர். 

இதனால் கிறிஸ் கெயில் மீண்டும் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் க்ரிக் பஸ் இணையத்தளத்துக்கு வழங்கியிருந்த செவ்வியில் தெரிவித்துள்ள வார்த்தைகள் நம்பிக்கை அளித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள கிறிஸ் கெயில்

”ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் அனில் கும்ப்ளே என்னிடம் 3ஆவது இலக்க வீரராக களமிறங்க கூறினார். இதனால் நான் 3ஆவது இலக்கத்தில் களமிறங்கி சிறப்பாக ஆடுகிறேன்

சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது எனக்கு எளிது தான். எனவே, இலங்கை அணிக்கு எதிரான தொடரில் என்னை எங்கு களமிறக்கினாலும் நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.

>> Video – மே.தீவுகள் தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ள இலங்கை அணி!

எனக்கு தற்போது 41 வயதாகின்றது. நான் என்னால் முடியுமான வரை கிரிக்கெட் விளையாடுவேன். கிரிக்கெட் அரங்கிலிருந்துய்வு பெறும் எண்ணம் தற்போதைக்கு எனக்கு கிடையாது. அதற்கான மனநிலையும் உள்ளது. பந்தை நோக்கி வேகமாக அடிப்பதை மிகவும் விரும்புகிறேன். அதுதான் எனக்கு தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவதற்கான ஆசையைக் கொடுத்துள்ளது.   

எனக்கு இலங்கை தொடருக்காக அழைப்பு வந்த போது, நான் உடனடியாக சரி என்று கூறிவிட்டேன். என் இதயம் அதைதான் தேடுகிறது. நான் அடுத்து வரும் ஐபிஎல், T20 உலகக் கிண்ண தொடர் என அனைத்திலும் பங்கேற்பேன்” என அவர் குறிப்பிட்டார்

அதிலும் குறிப்பாக, எதிர்வரும்க்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற வேண்டும் என்றும், இதன்மூலம் தான் 3ஆவது சம்பியன் பட்டத்தை தனது கணக்கில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். தற்போது தன்னுடைய இலட்சியமாக இது மட்டுமே உள்ளதாகவும் கூறியுள்ளார்.

>> இலங்கைக்கு எதிரான ஒருநாள், T20I குழாத்தை அறிவித்த மே.தீவுகள்

மேலும், இலங்கைக்கு எதிரான T20 தொடரையும் வெற்றி கொண்டு சிறப்பான ஆரம்பத்தை ஏற்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அணியை வெற்றிபெற செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், உலகிலேயே அதிசிறந்த வீரராக வேண்டும் என்பதே தனது ஆசை எனவும் அவர் குறிப்பிட்டார்

41 வயதான கிறிஸ் கெயில், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக பல போட்டிகளில் விளையாடியுள்ளார். இது தவிற, ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி சார்பாக 3ஆம் இலக்க வீரராக களமிறங்கி அசத்தியிருந்தார். குறிப்பாக, 9 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 395 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<