இலங்கை T20 கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக, சகலதுறை வீரர் தசுன் ஷானக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப் பயணத்தில் இலங்கை T20 அணியின் தலைவராக தசுன் ஷானக செயற்படவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அணியானது மூன்று T20i போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளவுள்ளது.
>> அபார சதங்களால் மைதானத்தை அலங்கரித்த மெதிவ்ஸ், சந்திமால்
இறுதியாக கடந்த ஆண்டு நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில், இலங்கை அணியின் தலைவராக லசித் மாலிங்க செயற்பட்டிருந்தார். எனினும், தற்போது தசுன் ஷானக புதிய தலைவராக பதவியேற்கவுள்ளார்.
தசுன் ஷானக இதற்கு முதலும் இலங்கை T20 அணியின் தலைவராக கடந்த 2019ம் ஆண்டு செயற்பட்டிருந்தார். இதன்போது, உலகின் முதற்தர T20 அணியாக இருந்த பாகிஸ்தான் அணியை, அவர்களுடைய சொந்த மண்ணில் 3-0 என இலங்கை வெற்றிக்கொண்டிருந்தது.
எவ்வாறாயினும், குறித்த தொடருக்கு பின்னர், இலங்கை அணியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. எனினும், இவர் இறுதியாக இலங்கையில் நடைபெற்ற லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் தம்புள்ள வைகிங் அணியை வழிநடத்தியிருந்தார். தசுன் ஷானக இந்த அணியை சிறப்பாக வழிடத்தியதுடன், இந்த அணி அரையிறுதிவரை முன்னேறியிருந்தது.
தசுன் ஷானக இலங்கை அணியின் புதிய T20 தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடர்வரை இவர் அணியை வழிநடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி மூன்று T20i, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்காக எதிர்வரும் 23ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளுக்கு, இலங்கை கிரிக்கெட் அணி செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<