Legends T20 தொடரிலிருந்து இலங்கையின் முக்கிய வீரர்கள் விலகல்

1226

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றும் வீதியோர பாதுகாப்பு இருபதுக்கு 20 தொடரிலிருந்து இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் உள்ளிட்ட ஐவர் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா வீதி பாதுகாப்பு அமைப்பு மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் ‘Road Saftey World Series’ என்ற பெயரில் மும்பையில் வீதியோர பாதுகாப்பு இருபதுக்கு 20 தொடர் கடந்த வருடம் மார்ச் மாதம் நடத்தப்பட்டது.

>>இலங்கை லெஜன்ட்ஸ் அணியில் இணையும் அர்னோல்ட், குலசேகர

இதில் இந்தியா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ‘Legends’ அணிகள் பங்கேற்றன. இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக், மேற்கிந்திய தீவுகள் பிரையன் லாரா, அவுஸ்திரேலியாவின் பிரட் லீ, இலங்கையின் முரளிதரன், திலகரட்ன டில்ஷான் உள்ளிட்ட முன்னணி ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடினர்.

கொரோனா வைரஸ் பரவலால்  இந்தப் போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் வரை நான்கு போட்டிகள் நடைபெற்று முடிந்தன. எனவே, 6 லீக் ஆட்டங்கள் உட்பட 7 போட்டிகள் மீதமிருந்தன.

இந்நிலையில் இத்தொடரை எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான போட்டிகள் ராய்பூரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

இதனிடையே, குறித்த தொடரில் இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான ரஸல் ஆனோல்ட், நுவன் குலசேகர மற்றும் தம்மிக பிரசாத் ஆகிய வீரர்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

>>Video – Sri Lanka Cricket இன் வளர்ச்சிக்காக கைகோர்க்கும் முன்னாள் வீரர்கள்..!

எதுஎவ்வாறாயினும், முன்னதாக இந்தத் தொடரில் விளையாடிய முத்தையா முரளிதரன், ரொமேஷ் களுவிதாரன, சமிந்த வாஸ், உபுல் சந்தன மற்றும் மார்வன் அத்தபத்து உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏனெனில், எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை அணி ஒருநாள் உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு 25 வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில், அதைமுன்னிட்டு 1996 உலகக் கிண்ணத்தில் விளையாடிய வீரர்கள் கலந்துகொள்ளும் விசேட கிரிக்கெட் போட்டியொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக இந்தியாவில் நடைபெறவுள்ள வீதியோர பாதுகாப்பு இருபதுக்கு 20 தொடரில் முரளிதரன் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>SLCயில் மாற்றத்தை ஏற்படுத்த நீதிமன்றத்தை நாடிய முரளிதரன்!

மறுபுறத்தில், அவுஸ்திரேலியாவில் தற்போது வசித்து வருகின்ற திலகரட்ன டில்ஷான், திலான் சமரவீர ஆகிய வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்பது இன்னும் உறுதி செய்யப்பட்டவில்லை என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, மார்ச் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் மற்றும் அவுஸ்திரேலிய ஜெண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் என அறிவிக்கப்பட்டது.

எதுஎவ்வாறாயினும், கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விமான பயணங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அவுஸ்திரேலிய லெஜண்ட்ஸ் அணி, வீதியோர பாதுகாப்பு இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்க மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

>>Video – 1996 உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு முக்கிய காரணம் என்ன? – குமார் தர்மசேன

இதனால் அவுஸ்திரேலியாவுக்குப் பதிலாக பங்களாதேஷ் லெஜண்ட்ஸ் அணி இந்தத் தொடரில் பங்கேற்கும் எனவும், ஆறாவது அணியாக இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணி இணைந்து கொள்ளும் எனவும் போட்டி ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<