இலங்கை லெஜன்ட்ஸ் அணியில் இணையும் அர்னோல்ட், குலசேகர 

1312

வீதிப் பாதுகாப்பு தொடர்பான அவதானம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்குடன் இந்தியாவில் நடைபெறவுள்ள முன்னாள் நட்சத்திரங்களின் T20 கிரிக்கெட் தொடரில் (Road Safety World Series) பங்கேற்கும் இலங்கை லெஜன்ட்ஸ் அணியில் இணையும் புதிய வீரர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. 

Read : SLCயில் மாற்றத்தை ஏற்படுத்த நீதிமன்றத்தை நாடிய முரளிதரன்!

அதன்படி இலங்கை லெஜன்ட்ஸ் அணியில் இணையும் புதிய இணைப்புக்களில் பிரதான வீரராக தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளரும் முன்னாள் சகலதுறைவீரருமான ரசல் அர்னோல்ட் காணப்படுகின்றார். 

அர்னோல்ட் தவிர, இலங்கையின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்களான நுவான் குலசேகர, தம்மிக்க பிரசாத் போன்றோரும் இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் புதிய உள்ளடக்கங்களாக மாறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

இந்தியாவின் பொது மக்களுக்கு வீதிப் பாதுகாப்பு தொடர்பான அவதானம் ஒன்றினை ஏற்படுத்தும் நோக்குடன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த T20 தொடர் எதிர்வரும் மார்ச் 02ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. 

கடந்த ஆண்டில் முதல்தடவையாக நடைபெற்ற இந்த தொடரில் இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் தொடர் கொவிட்-19 வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக முழுமையாக நடைபெறாது போயிருந்தமை சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும். 

Also Read : பங்களாதேஷ் கிரிக்கெட்டுடன் இணையும் ஷம்பக்க ராமநாயக்க

இந்த கிரிக்கெட் தொடரில் புதிதாக உள்வாங்கப்பட்டிருக்கும் வீரர்கள் தவிர முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களான முத்தையா முரளிதரன், சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக் மற்றும் ப்ரெட் லீ போன்ற  நட்சத்திரங்களும் பங்கெடுக்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

அதேநேரம், இந்த தொடரில் பங்கெடுக்கவிருக்கும் இலங்கை லெஜன்ட்ஸ் அணி, இம்மாதம் 27ஆம் திகதி இந்தியாவிற்கு பயணமாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை லெஜன்ட்ஸ் அணி – திலகரட்ன டில்சான் (அணித்தலைவர்), துலன்ஜன விஜேசிங்க, சாமர கப்புகெதர, சமிந்த வாஸ், பர்வீஸ் மஹரூப், மார்வன் அத்தபத்து, முத்தையா முரளிதரன், ரங்கன ஹேரத், ரொமேஷ் களுவிதாரன, சஜித்திர சேனநாயக்க, திலான் துஷார, திலின கண்டம்பி, உபுல் சந்தன

மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு