இலங்கை கிரிக்கெட் அணியின் 36 வீரர்கள், ஆதரவு ஊழியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் கிரிக்கெட் அணியுடன் தொடர்புடையவர்கள் என சுமார் 70 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் பெப்ரவரி 20ஆம் திகதி ஆரம்பமாகவிருந்ததுடன், இதன் முதலாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது.
மிக்கி ஆர்தர், திரிமான்ன ஆகியோருக்கு கொவிட்-19 தொற்று!
இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் பின்னர் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகளில் இலங்கை அணி விளையாடவிருந்தது.
இந்த நிலையில், இலங்கை அணி வீரர் லஹிரு திரிமான்ன, பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இம்மாதம் ஆரம்பமாகவிருந்த இலங்கைக் கிரிக்கெட் அணியின் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தை ஒத்திவைக்க இலங்கை கிரிக்கெட் சபை கடந்த வாரம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதனிடையே, இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் அணியின் பயிற்சியாளர்களுக்கு நேற்றைய தினம் (10) PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், இதன் முடிவு இன்று வெளியாகியது.
இதில் மேற்கிந்திய தீவுகள் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இலங்கை வீரர்கள் 35 பேருக்கும், அணியின் பயிற்சியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொவிட் தடுப்பூசி?
இதன்படி, மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்துக்கான பயிற்சி முகாமை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுஇவ்வாறிருக்க, இருநாட்டு கிரிக்கெட் சபைகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக இலங்கை அணி திட்டமிட்டபடி மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் என கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெரும்பாலும், ஏற்கனவே திட்டமிட்ட டெஸ்ட் தொடரானது ஒரு வாரம் பிற்போடப்படலாம் எனவும், இலங்கை கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் மேற்கிந்திய தீவுகள் நோக்கி புறப்பட்டுச் செல்லும் எனவும் கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க …