ஆசிய கிரிக்கெட் சபையின் (ACC) புதிய தலைவராக, இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் ஷா நியமிக்கப்பட்டுள்ளமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஆசிய கிரிக்கெட் சபையின் வருடாந்த சந்திப்பின் போது, புதிய தலைவரை தெரிவுசெய்யும் பணி நிறைவுபெற்றுள்ளது. இதில், 32 வயதான ஜெய் ஷா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறைந்த வயதில் இந்த பதவியை பெற்றவர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.
>>இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி
ஜெய் ஷா ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு முன்னர் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜ்முல் ஹாசன், இந்த பதவியை வகித்துவந்தார்.
குறித்த பதவி தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜெய் ஷா, “ஆசிய கிரிக்கெட் சபை ஆரோக்கியமான போட்டியுடன், முன்னணி கிரிக்கெட் சபைகளுடன் முன்னேறி வருகின்றது. சிறிய இடங்களில் இருந்தும் கிரிக்கெட் பெரிதாக வளர்வதற்கு காரணமாக உள்ளது. எனவே, அனைத்து பகுதிகளிலும் கிரிக்கெட் வளர்ச்சியடைவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.
“கொவிட்-19 வைரஸ் காரணமாக போட்டிகளை நடத்துவதில், சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எனினும், வரலாற்றில் இவ்வாறான கடினமான காலப்பகுதியில், புதிய மாற்றங்களை ஏற்படுத்தி போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதிகமான கிரிக்கெட் சபைகள், ஆடவருக்கான கிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பித்துள்ளன.
மகளிர் மற்றும் வயதெல்லை கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, ஆசிய கிரிக்கெட் சபை முன்னோடியாக மகளிர் மற்றும் வயதெல்லை கிரிக்கெட் போட்டிகளை இந்த ஆண்டு நடத்துவதற்கு தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றது” என மேலும் சுட்டிக்காட்டினார்.
ஆசிய கிரிக்கெட் சபையானது, ஆடவர், மகளிர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ணத் தொடரை நடத்துவதற்கான உரிமையை கொண்டுள்ளது. எனினும், கடந்த ஆண்டு கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக குறித்த தொடர் நடத்தப்படவில்லை.
கடந்த ஆண்டு ஆசிய கிண்ணத் தொடரை நடத்துவதற்கான உரிமையை பாகிஸ்தான் பெற்றிருந்த போதும், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஆசிய கிண்ணத் தொடரை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், 2022ம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத் தொடரை நடத்துவதற்கான உரிமம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<