மீண்டும் ஸ்குவாஷ் சம்பியனாகிய சாலிஹா இஸ்ஸடீன்

274

சிரேஷ்ட வீர வீராங்கனைகளுக்கான 40ஆவது தேசிய ஸ்குவாஷ் சம்பியன்ஷிப் தொடரின் மகளிர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில், சனித்ம சினாலியினை வீழ்த்தியிருக்கும் சாலிஹா இஸ்ஸடீன் தொடர்ந்து இரண்டாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தெற்காசிய விளையாட்டில் இலங்கைக்கு பெருமை சேர்த்த முஸ்லிம் வீராங்கனை சலிஹா

கொவிட்-19 வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிரேஷ்ட வீர வீராங்கனைகளுக்கான 2020ஆம் ஆண்டிற்கான 40ஆவது தேசிய ஸ்குவாஷ் சம்பியன்ஷிப் தொடர், நேற்று (31) கொழும்பு SSC ஸ்குவாஷ் அரங்கில் நடைபெற்றிருந்தது. 

இதில் மகளிர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனான சாலிஹா இஸ்ஸடீன், சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலத்தின் நட்சத்திர வீராங்கனையான சனித்ம சினாலியினை எதிர்கொண்டிருந்தார். 

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியின் முதல் இரண்டு பாதிகளையும் சாலிஹா இஸ்ஸடீன் முழு ஆதிக்கத்தினை வெளிப்படுத்தி 11-04, 11-03 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றினார். பின்னர், போட்டியின் மூன்றாம் பாதியில் அபாரம் காட்டிய சனித்ம சினாலி மூன்றாம் பாதியினை 08-11 என்கிற புள்ளிகள் கணக்கில் சாலிஹாவிடம் இருந்து கைப்பற்றிக் கொண்டார். எனினும், போட்டியின் இறுதிப் பாதியில் மீண்டும் தனது திறமையினை வெளிப்படுத்திய சாலிஹா, இறுதிப் பாதியில் சனித்ம சினாலியினை 11-04 என்கிற புள்ளிகள் கணக்கில் அபாரமாக வீழ்த்தி மூன்று பாதிகளை கைப்பற்றிய நிலையில் சம்பியன் பட்டம் வென்றார்.

மறுமுனையில், ஆடவர் இறுதிப் போட்டியில் சமில் வக்கீலினை 11-06, 11-05, 11-02 என்கிற புள்ளிகள் கணக்கில் இலகுவாக வீழ்த்திய ரவிந்து லக்சிறி 8ஆவது முறையாக தேசிய சம்பியனாக நாமம் சூடிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

>>சுவாரசியமான விளையாட்டுச் செய்திகளுக்கு<<