இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ரன்ஜி கிண்ண கிரிக்கெட் தொடரின், 2020-21ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான போட்டிகள் நடைபெறாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் முதற்தர தொடரான ரன்ஜி கிண்ணத் தொடர் 1934ஆம் ஆண்டு ஆரம்பமாகியதிலிருந்து தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றது. எனினும், உலகளாவிய ரீதியில் தீவிரமடைந்துவரும் கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இம்முறை தொடர் நடத்தப்படாது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“Born Again” குற்றச்சாட்டுக்களை மறுக்கும் இலங்கை கிரிக்கெட் சபை
எவ்வாறாயினும், இந்த பருவகாலத்துக்கான ஆடவர், மகளிர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான 50 ஓவர்கள் கொண்ட தொடர்கள் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) செயலாளர் ஜெய் ஷா, ஏனைய மாநில கிரிக்கெட் சபைகளின் கருத்துகளுக்கு இணங்க, இம்முறை ரன்ஜி கிண்ணமானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
குறித்த இந்த விடயம் குறித்து மேலும் அறிவித்த ஜெய் ஷா, “அனைவரதும் பாதுகாப்பை கருத்திற்கொண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், ரன்ஜி கிண்ணத்தை நடத்துவது இலகுவான விடயமல்ல. எனினும், மகளிர் கிரிக்கெட்டை மீண்டும் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும்.
எனவே, ஆடவருக்கான 50 ஓவர்கள் கொண்ட விஜய் ஹஷாரே கிண்ணம், மகளிருக்கான 50 ஓவர்கள் கொண்ட தொடர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான வினு மன்கட் கிண்ணம் என்பவற்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். குறித்த இந்த தொடர்கள் குறித்த மேலதிக விடயங்கள், மாநில கிரிக்கெட் சங்கங்களுடன் நடத்தப்படும் சந்திப்பின் பின்னர், அறிவிக்கப்படும்” என்றார்.
கொவிட்-19 வைரஸ் தொற்றினால், இந்தியாவின் உள்ளூர் போட்டிகள் நிறுத்தப்பட்ட நிலையில், கடந்த மாதம் செய்ட் முஷ்டாக் அலி கிண்ண T20 தொடர் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி கிண்ணத்தை வெற்றிக்கொண்டது.
அதேநேரம், கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு மத்தியில், இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் சர்வதேச தொடரில் இந்திய அணி, தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<