இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை விமர்சிக்கும் மிக்கி ஆர்தர்

1300
Mickey Arthur

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்து தொடரை 2-0 என இழந்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியை பொருத்தவரையில், இலங்கை அணி மிகச்சிறந்த முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியைவிட 41 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.

>> இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய முகாமையாளர்

எனினும், நான்காவது நாளான நேற்றைய தினம் (25) முதல் பகுதி ஆட்டத்தில் (செசனில்) 6 விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்த இலங்கை அணி, மொத்தமாக 126 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டதுடன், வெற்றிபெற வாய்ப்பிருந்த போட்டியில், தோல்வியடைந்தது. குறிப்பாக ஐந்தாவது நாள் ஆட்டம் நடைபெறாமல், போட்டி முடிவை எட்டியது.

இலங்கை அணியின் இந்த தோல்வி குறித்து கருத்து வெளியிட்ட தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர், மூன்று நாட்கள் கொடுத்த கடின உழைப்பை இலங்கை அணி, இரண்டு மணித்தியாலங்களில் வீணாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் மேலும் குறிப்பிட்ட இவர், 

“மூன்று நாட்களாக நாம் கடினமாக போராடியதற்கான உழைப்பு, இரண்டு மணித்தியாலயங்களில் வீணாக்கப்பட்டது. இதற்கான காரணமாக எமது மோசமான துடுப்பாட்டத்தையே குறிப்பிடவேண்டும். இதுதொடர்பில், நான் வீரர்களுடன் கலந்துரையாடவேண்டும்.

அத்துடன், இன்னிங்ஸில் ஓட்ட எண்ணிக்கையை அதிகமாக பெற்றும், எம்மால் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க முடியாமை ஏமாற்றத்துக்குறியது. இது முதற்தடவையாக நடைபெற்றுள்ளது. இதுதொடர்பில் வீரர்களுடன் அமர்ந்து கலந்துரையாடவேண்டும்” என்றார்.

அதுமாத்திரமின்றி, இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கை அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது. எனவே, முதல் போட்டியில் செய்த அதே தவறு மீண்டும் இடம்பெற்றுள்ளதாக மிக்கி ஆர்தர் சுட்டிக்காட்டினார்.

“நாம் மிகவும் கடினமாக உழைத்த மூன்று நாள் உழைப்பு ஒரு நாளில் இழக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. முதல் டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் ஓட்டங்களை பெறத்தவறியதால் தோல்வியை தழுவியிருந்தோம். 

அணியென்ற ரீதியில் இவ்வாறான விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு செசனில் இதுபோன்ற பிரதிபலிப்பை பெறுவது, மிக மிக ஏமாற்றத்துக்குறியதாகும். மூன்று நாள் போராடியதில் போட்டி இரண்டு அணிகளுக்கும் சாதகமாக இருந்ததுடன், எமக்கு வெற்றிபெறுவதற்கும் வாய்ப்பிருந்தது. ஆனால், நாம் அதனை சரியாக பயன்படுத்தவில்லை. எனவே, நான் மிகவும் ஏமாற்றமடைகிறேன்” என குறிப்பிட்டார்.

இதேவேளை, இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸில் வேகமாக ஓட்டங்களை பெற ஆரம்பித்தது. இதன்காரணமாகவே வீரர்கள், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். வேகமாக ஓட்டம் பெறுவது இலங்கை அணியின் திட்டம் இல்லை எனவும் மிக்கி ஆர்தர் குறிப்பிட்டார்.

>> ஒருநாள், T20i தொடர்களுக்காக இங்கிலாந்து செல்லவுள்ள இலங்கை அணி

“ஓட்டங்களை வேகமாக பெறுவது என்பது எமது திட்டத்துக்கு அருகிலும் இல்லை. நாம் எதிரணியின் அழுத்தத்தை அவதானித்து, அதற்கேற்ப இரண்டு செசன்கள் துடுப்பெடுத்தாடி, அணிக்கு வெற்றிக்கான பாதையை பெற்றுக்கொடுப்பதே திட்டம். 

அதுமாத்திரமின்றி, முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியது போன்று ஓட்டங்களை பெறவேண்டும் என திட்டமிட்டிருந்தோம். ஆனால், முழுமையாக அந்த திட்டம் கைவிடப்பட்டது. எனவே, அதுதொடர்பில் நான் கண்டறியவேண்டும்” என்றார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் நிறைவுபெற்றுள்ள நிலையில், அடுத்த தொடருக்காக இலங்கை அணியானது, மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

>> மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க <<