அபு தாபி T10 லீக்கில் விளையாடவுள்ள கெவின் கொத்திகொட!

Abu Dhabi T10 League

255

இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரரான கெவின் கொத்திகொட, அபு தாபி T10  லீக்கில் மராத்தா அரேபியன்ஸ் அணியில் விளையாடவுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கெவின் கொத்திகொடவின் விநோதமான பந்துவீச்சு பாணியை அவதானித்த நடப்பு சம்பியனான மராத்தா அரேபியன்ஸ் அணி, இந்த பருவகாலத்துக்கான போட்டிகளில் விளையாடுவதற்கு அவரை அணியில் இணைத்துள்ளது.

Read :  நீச்சலில் ஆரம்பமாகி இலங்கை கிரிக்கெட் அணிக்கு வந்த ரமேஷ் மெண்டிஸ்

கடந்த ஆண்டு நடைபெற்ற அபு தாபி T10 லீக்கில் திசர பெரேரா தலைமையிலான பங்களா டைகர்ஸ் அணிக்காக கெவின் கொத்திகொட விளையாடியிருந்தார். இதன்போது, இவருடைய விநோதமான பந்துவீசிச்சு பாணி மற்றும் சுழல்பந்துவீச்சு என்பன அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. அதுமாத்திரிமின்றி, கெவின் கொத்திகொடவின் பந்துவீச்சு பாணியானது, தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரர் போல் எடம்ஸின் பந்துவீச்சு பாணியை ஒத்ததாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கெவின் கொத்திகொட இறுதியாக இலங்கையில் நடைபெற்ற லங்கா ப்ரீமியர் லீக் தொடரில், கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக இணைக்கப்பட்ட போதும், அவர் எந்தவொரு போட்டியிலும் விளையாடியிருக்கவில்லை.

கெவின் கொத்திகொடவுடன், இலங்கையின் இளம் வீரர்கள் பலரும் அபு தாபி T10 லீக்கில் விளையாடவுள்ளனர். மதீஷ பத்திரன, தனன்ஜய லக்ஷான் மற்றும் மஹீஸ் தீக்ஷன ஆகிய புதுமுக வீரர்களே இவ்வாறு அபு தாபி T10 தொடருக்காக இணைக்கப்பட்டுள்ளனர்.

லசித் மாலிங்கவின் பந்துவீச்சு பாணியில், பந்துவீசும் வேகப் பந்துவீச்சாளர் மதீஷ பத்திரன பங்களா டைகர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளதுடன், சகலதுறை வீரர் தனன்ஜய லக்ஷான் மற்றும் மாய சுழல்பந்துவீச்சாளர் மஹீஸ் தீக்ஷன ஆகியோர் நொர்தென் வொரியர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளனர்.

மேற்குறித்த புதுமுக வீரர்களுக்கு அபு தாபி T10 லீக்கில் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும், குறித்த தொடருக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள இலங்கை அணியின் 10 வீரர்களுக்கு, இலங்கை கிரிக்கெட் சபை விளையாடுவதற்கான அனுமதியை வழங்கவில்லை்.

அபு தாபி T10 தொடர் இம்மாதம் 28ம் திகதி முதல் பெப்ரவரி 6ம் திகதிவரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க