எதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் திறமையை வளர்த்துக்கொள்வது ஒப்பீட்டளவில் எளிது. ஆர்வம் ஆழமாக இருந்தால் திறமையை வளர்த்துக்கொள்வதற்கான ஊக்கத்தையும் அந்த ஆர்வமே தந்துவிடும்.
பாட்டு, விளையாட்டு, அறிவியல் என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். எனக்குப் பிடித்திருக்கிறது, ஆகவே நான் இதைச் செய்கிறேன் என்னும் எண்ணம் ஒருவரது முனைப்பையும் முயற்சியையும் பெருமளவில் பெருக்கிவிடும். எனவே ஆழமான ஆர்வம் உள்ள துறையில் திறமை வந்துவிடும்.
>> மெதிவ்ஸ் – சந்திமால் இணைப்பாட்டத்தில் வலுப்பெற்ற இலங்கை அணி
தனக்கான துறையைத் தேர்ந்தெடுப்பதில் ஒருவரின் ஆர்வம்தான் அடிப்படை. ஆனால் ஆர்வம் இருக்கிறது என்பதாலேயே திறமை வந்துவிடாது. எனவே திறமையில் சறுக்கும் பட்சத்தில் உஷாராக ஆர்வத்துக்குச் சற்றே அணைபோட்டுவிட வேண்டும்.
திறமை எதில் இருக்கிறதோ, அதில் ஏற்கனவே இருக்கக்கூடிய சிறிதளவு ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு அதைப் பிரதான துறையாக வைத்துக்கொள்ளலாம். ஆர்வம் அதிகமாக உள்ள விடயத்தை இழந்துவிடாமல் பொழுதுபோக்காகவோ இரண்டாவது துறையாகவோ வைத்துக்கொள்ளலாம்.
ஆர்வம் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் திறமை அப்படி அல்ல. தவிர, திறமையைத் தொடர்ந்து பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். எனவே அதற்கு அதிக முயற்சி தேவைப்படும். எனவே, திறமையைக் கண்டுகொண்டு, அதில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு அதில் சிறப்பாக வருவதே சிறந்த வழியாக இருக்க முடியும்.
எனவே, நீச்சல், பெட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுக்களில் திறமை இருந்தும் தன்னிடம் இருந்த ஆர்வத்தினால் கிரிக்கெட் விளையாட்டை தேர்ந்தெடுத்து இன்று ஒரு கிரிக்கெட் வீரராக மாறியிருக்கும் ஒரு இளம் வீரர் தான் ரமேஷ் மெண்டிஸ்.
>> Video – இலங்கை டெஸ்ட் குழாத்திலிருந்து Dimuth, Kusal Mendis அதிரடி நீக்கம்..!
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவதும், இறுதியுமான போட்டி 22 ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியது.
இந்தப் போட்டியில் இலங்கை டெஸ்ட் அணியின் 154ஆவது வீரராக 25 வயதான சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரான ரமேஷ் மெண்டிஸ் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார்.
அண்மையில் நிறைவுக்கு வந்த அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் தம்புள்ள வைகிங் அணிக்காக விளையாடிய அனைவரது கவனத்தையும் பெற்றுக்கொண்ட ரமேஷ் மெண்டிஸின் கிரிக்கெட் வாழ்க்கை பற்றிய தொகுப்பை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
இலங்கையில் அதிகளவு நீச்சல் வீரர்களை உருவாக்கி வருகின்ற தென் மாகாணம், அம்பலாந்தோட்டை, ஊரவத்த என்ற கிராமத்தில் 1995ஆம் ஆண்டு ஜுலை மாதம் 7ஆம் திகதி ரமேஷ் மெண்டிஸ் பிறந்தார். இரண்டு சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் இவர் தான் மூத்த பிள்ளை.
கடற்கரையை அண்மித்த பகுதி என்பதால் ரமேஷ் மெண்டிஸின் வீட்டிலும் நீச்சல் விளையாட்டுக்குத் தான் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் ரமேஷ் மெண்டிஸின் தந்தையான ப்ரசன்ன மெண்டிஸ் இலங்கையின் முன்னாள் நீச்சல் சம்பியன்.
>> Video – கிரிக்கெட்டில் சாதிக்க தன்னம்பிக்கை வேண்டும் – PRAKASH SCHAFFTER
அவர் 1987 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி திறமைகளை வெளிப்படுத்தியவர்.
எனவே தனது மகன் ரமேஷ் மெண்டிஸையும் ஒரு நீச்சல் வீரராக உருவாக்குவதற்கு கனவு கண்ட அவர் அதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தார். மறுபுறத்தில் தான் வாழ்கின்ற கிராமத்தில் உள்ள நீச்சல் விளையாட்டை விரும்புகின்ற பிள்ளைகளுக்கு மாதம்பை ஆற்றில் பயிற்சிகளையும் வழங்கி வந்தார்.
இவ்வாறான பின்னணியில் தான் ரமேஷ் மெண்டிஸும் நீச்சல் விளையாட்டை முறையாக தனது தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்டதுடன், பல வெற்றிகளையும் ஈட்டினார்.
எனவே தன்னைப் போல தனது மகனும் நீச்சல் விளையாட்டில் இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தி சாதிக்க வேண்டும் என்ற கனவு ரமேஷ் மெண்டிஸின் தந்தையின் மனதில் வேறாக ஊன்றிப் பிடித்துக்கொண்டது.
ஆனால் காலம் செல்லச் செல்ல ரமேஷ் மெண்டிஸ் நீச்சல் விளையாட்டை விட்டு தூரமாகினார். குறிப்பாக, ரமேஷ் மெண்டிஸின் தந்தை இலங்கை பொலிஸில் கடமையாற்றுவதால் அவரால் அதிகளவு நேரத்தை நீச்சல் பயிற்சிகளுக்காக வழங்க முடியாமல் போனது.
இதன்காரணமாக நீச்சல் விளையாட்டை கைவிட்டு தான் கல்வி கற்ற அம்பலாந்தொட்டை ஸ்ரீ தேவானந்த கல்லூரியில் பெட்மிண்டன் விளையாட்டை தேர்வு செய்தார். இதில் திறமைகளை வெளிப்படுத்திய அவர், அகில இலங்கை மட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளையும் ஈட்டினார்.
>> பங்களா டைகர்ஸ் அணியின் பயிற்சியாளராக திலின கண்டம்பி
இதில் சிறப்பம்சம் என்னவெனில் நீச்சல் விளையாட்டின் போது ரமேஷ் மெண்டிஸுக்கு உறுதுணையாக அவரது தந்தை பக்கத்தில் இருந்தது போல பெட்மிண்டன் விளையாட்டில் அவரது தாயாரான துல்மினி கஹதவல பக்கபலமாக இருந்தார்.
உண்மையில் அவரது தாயாரும் வலைப்பந்தாட்டம் மற்றும் மெய்வல்லுனர் ஆகிய விளையாட்டுப் போட்டியில் சாதித்த முன்னாள் தேசிய மட்ட வீராங்கனையாவார்.
எனவே தனது தாயாரின் ஒத்துழைப்புடன் பெட்மிண்டன் விளையாட்டில் ரமேஷ் மெண்டிஸ் சாதித்தாலும், அந்த விளையாட்டையும் அவர் கைவிட்டார்.
நீச்சல் மற்றும் பெட்மிண்டன் விளையாட்டுக்கு விடைகொடுத்த அவர், அடுத்ததாக கிரிக்கெட் விளையாட்டை தேர்ந்தெடுத்தார். ரமேஷ் மெண்டிஸ் கிரிக்கெட் விளையாடுவதில் அவரது தந்தை மௌனமாக இருந்தாலும், அவரது தாயார் பலத்த எதிர்ப்பினை வெளியிட்டார். ஆனால் தனது நிலைப்பாட்டில் ரமேஷ் மெண்டிஸ் உறுதியாக இருந்தார்.
இதன்போது ரமேஷ் மெண்டிஸுக்கு உறுதுணையாக இருந்தவர் அவருடைய சித்தப்பாவான ஓய்வுபெற்ற மேஜர் நிமல் மெண்டிஸ். அவர் தான் ரமேஷ் மெண்டிஸை ஒரு கிரிக்கெட் வீரராக உருவாக்குவதில் அனைத்து பொறுப்புகளையும் எடுத்தார்.
இதன்படி, தென்னிலங்கையில் பல முன்னணி விளையாட்டு பிரபலங்களை உருவாக்கிய அம்பலாந்தொட்டை ஸ்ரீ தேவானந்த கல்லூரியில் 13 வயதுக்குட்பட்ட பிரிவில் ரமேஷ் மெண்டிஸ் கிரிக்கெட் விளையாட்டில் காலடி எடுத்துவைத்தார்.
>> Video – “எந்த இடத்திலும் துடுப்பெடுத்தாட தயார்” – ஓசத பெர்னாண்டோ
ரமேஷ் மெண்டிஸின் முதலாவது பயிற்சியாளர் தான் சுராஜ் சன்ஜீவ. அவரது பயிற்றுவிப்பின் கீழ் மூன்று வருடங்கள் அந்தக் கல்லூரியில் கிரிக்கெட் விளையாட்டை முன்னெடுத்தார். இதில் 2008இல் அந்த கல்லூரியின் 13 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைவராகவும் செயற்பட்டார்.
சிறுவயது முதல் சகலதுறையிலும் பிரகாசித்து வந்த அவர், அம்பலங்கொட தர்மாஷோக வித்தியாலயத்தில் இணைந்து கொண்டார். 15 வயது மற்றும் 19 வயதுப் பிரிவுகள் வரை அந்தப் பாடசாலையில் ரமேஷ் மெண்டிஸ் கிரிக்கெட் விளையாட்டை முன்னெடுத்தார்.
2012/13 பருவகாலத்தில் 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடிய அவர், 98 விக்கெட்டுக்களையும், 500 இற்கும் அதிகமான ஓட்டங்களையும் குவித்தார்.
இதன்காரணமாக குறித்த வருடத்தின் அதிசிறந்த பந்துவீச்சாளருக்கான விருதையும், வருடத்தின் இரண்டாவது சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான விருதையும் தட்டிச் சென்றார்.
இதில் சிறப்பம்சம் என்னவெனில், வருடத்தின் சிறந்த வீரருக்கான விருதினை சதீர சமரவிகர்ம பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு, 2013/14 பாடசாலை பருவகாலத்தில் அம்பலாங்கொட தர்மாஷோக வித்தியாலயத்தின் 19 வயதுக்குட்பட்ட அணித் தலைவராக ரமேஷ் மெண்டிஸ் நியமிக்கப்பட்டார். குறித்த பருவகாலத்தில் 8 போட்டிகளில் விளையாடிய அவர், 60 விக்கெட்டுக்களையும், 800 இற்கும் அதிகமான ஓட்டங்களையும் குவித்தார்.
>> Video – IPL இல் புது அவதாரம் எடுக்கவுள்ள Kumar Sangakkara…!
இதன்படி, மீண்டும் வருடத்தின் அதிசிறந்த பந்துவீச்சாளருக்கான விருதினை வென்ற அவர், தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் வருடத்தின் அதிசிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான விருதினை தட்டிச் சென்றார்.
இதன்போது குசல் மெண்டிஸ் வருடத்தின் சிறந்த பாடசாலை வீரருக்கான விருதினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
எனவே, பாடசாலைக் காலத்தில் சகலதுறையிலும் பிரகாசித்து அபரிமிதமான திறமைகளை வெளிப்படுத்திய ரமேஷ் மெண்டிஸ், இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.சி.சி இளையோர் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடினார்.
அதேபோல, குறித்த வருடத்தில் நடைபெற்ற ஆசிய இளையோர் கிண்ணத்திலும் விளையாடிய அவர், இலங்கை A அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்களாதேஷ் அணியுடனான தொடரிலும், இலங்கை வளர்ந்துவரும் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான தொடர்களிலும் விளையாடினார்.
இதில் பங்களாதேஷ் அணிக்கெதிரான வளர்ந்துவரும் தொடரில் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களையும், 97 ஓட்டங்களையும் அவர் குவித்தார். இதுதான் வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற போட்டியொன்றில் ரமேஷ் மெண்டிஸ் வெளிப்படுத்திய அதிசிறந்த திறமையாக உள்ளது.
அதுமாத்திரமின்றி, குறித்த தொடரில் பந்துவீச்சில் 3 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுக்களையும் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து தனது 20ஆவது வயதில் இலங்கையின் முன்னணி கழகங்களில் ஒன்றான எஸ்.எஸ்சி கழகத்துடன் இணைந்துகொண்டு முதல்தரப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார்.
அதன்பிறகு ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் மற்றும் தற்போது முவர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்காகவும் அவர் விளையாடி வருகின்றார். இதில் பாடசாலை காலத்தில் அவர் அம்பலாங்கொடயில் உள்ள சிங்ஹ விளையாட்டுக் கழகத்துக்காக விளையாடியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதனிடையே 2019இல் நடைபெற்ற சிங்கர் கிண்ண இருபதுக்கு 20 தொடரில் DIMO அணிக்காக விளையாடிய ரமேஷ் மெண்டிஸ், குறித்த தொடரின் சிறந்த வீரருக்கான விருதையும் பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதல்தர கழகங்களுக்கிடையிலான மேஜர் லீக் தொடரில் முவர்ஸ் மற்றும் நீர்கொழும்பு அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் 5ஆவது இலக்க வீரராகக் களமிறங்கி 270 பந்துகளுக்கு முகங்கொடுத்து ஆட்டமிழக்காமல் 300 ஓட்டங்களை எடுத்தார். இதுதான் ரமேஷ் மெண்டிஸின் அதிசிறந்த ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியது.
இதன்படி, குறித்த தொடரின் முடிவில் 8 போட்டிகளில் விளையாடி 714 ஓட்டங்களை குவித்த அவர், அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களுக்கான பட்டியலில் 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதில் ஒரு முச்சதம், இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரைச்சதங்கள் உள்ளடங்கும். அதுமாத்திரமின்றி, பந்துவீச்சில் 23 விக்கெட்டுக்களையும் எடுத்தார்.
இதுஇவ்வாறிருக்க, கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரில் தம்புள்ள வைகிங் அணிக்காக விளையாடிய ரமேஷ் மெண்டிஸ், 7 போட்டிகளில் விளையாடி 49 ஓட்டங்களையும் 6 விக்கெட்டுக்களையும் எடுத்தார்.
எனவே, ரமேஷ் மெண்டிஸை நாங்கள் தொடர்பு கொண்டபோது, பாடசாலை பயிற்சியாளர் சுராஜ் சன்ஜீவ, விராஜ் சமிந்த, பீ மில்டன் மற்றும் இசுரு அனுஷ்க உள்ளிட்ட பயிற்சியாளர்களுக்கும், இலங்கை தேசிய அணி மற்றும் மாகாண, மாவட்ட கிரிக்கெட் அணிகளின் பயிற்சியாளர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
அத்துடன் தனது முகாமையாளராகச் கடமையாற்றுகின்ற சீனிகம நற்பணி மன்றத்தின் ஆரம்பகர்த்தா குஷில் குணசேகரவுக்கும் நன்றிகளை அவர் தெரிவித்தார்.
>> அபுதாபி T10 லீக்கில் களமிறங்கும் ‘குட்டி மாலிங்க’
இது ஒருபுறமிருக்க, ரமேஷ் மெண்டிஸின் இரண்டு சகோதரர்களும் கிரிக்கெட் வீரர்களாக உள்ளனர். இதில் நிமேஷ் மெண்டிஸ், இரண்டு வருடங்களுக்கு முன் அம்பலாங்கொட தர்மாஷோக வித்தியாலய கிரிக்கெட் அணியின் தலைவராகச் செயற்பட்டார். அடுத்த சகோதரரான மலித்த மெண்டிஸ், அதே பாடசாலையின் 17 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே, இலங்கை அணிக்கு தேவையான ஒரு முக்கியமான ஒரு துரும்புச்சீட்டாக ரமேஷ் மெண்டிஸ், எதிர்வரும் காலத்தில் இருப்பார் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாகும்.
அதுமாத்திரமின்றி, அவரது கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பாக அமைய இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<