ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையினால் நான்காவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள அபுதாபி T10 லீக் கிரிக்கெட் தொடரானது அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.
எட்டு அணிகள் பங்குபற்றவுள்ள குறித்த தொடரில் இலங்கை அணியின் முன்னணி T20 வீரர்களான திசர பெரேரா, இசுரு உதான உள்ளிட்ட 12 இலங்கை வீரர்கள் கடந்த மாதம் நடைபெற்ற வீரர்களுக்கான ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.
>> அபுதாபி T10 லீக்கில் சங்கக்காரவுக்கு புதிய பதவி
எனினும், இலங்கை அணியின் அடுத்தடுத்த சர்வதேச போட்டிகளை கருத்திற் கொண்டு தேசிய அணியில் இன்னும் அறிமுகத்தைப் பெற்றுக்கொள்ளாத சகலதுறை வீரரான தனன்ஜய லக்ஷான், சுழல் பந்துவீச்சாளரான மஹேஷ் தீக்ஷன மற்றும் வேகப் பந்துவீச்சாளரான மதீஷ பத்திரன ஆகிய மூன்று வீரர்களுக்கு மாத்திரம் இம்முறை அபுதாபி T10 லீக் தொடரில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளது.
அபுதாபி T10 லீக் தொடரின் நான்காவது அத்தியாயம் இம்மாதம் 28ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 6ஆம் திகதிவரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், இலங்கை அணியின் முன்னணி T20 வீரர்களான திசர பெரேரா மற்றும் இசுரு உதான ஆகியோர் முறையே புனே டெவில்ஸ் மற்றும் பங்ளா டைகர்ஸ் அணிகளின் ஐகொன் வீரர்களாக பெயரிடப்பட்டனர்.
>> Video – அபுதாபி T10 லீக்கில் களமறிங்கும் இலங்கை வீரர்கள் | Sports Roundup – Epi 141
இதில் தசுன் ஷானக, துஷ்மந்த சமீர (டெல்லி புல்ஸ்), பானுக ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க, லஹிரு குமார (டெக்கன் க்ளேடியேட்டர்ஸ்), சாமர கபுகெதர, அஜந்த மெண்டிஸ் (புனே டெவில்ஸ்), அவிஷ்க பெர்னாண்டோ, மதீஷ பத்திரன (பங்ளா டைகர்ஸ்), நுவன் பிரதீப், மஹேஷ் தீக்ஷன, தனன்ஜய லக்ஷான் (நொர்தென் வொரியர்ஸ்) உள்ளிட்ட வீரர்கள் இம்முறை அபுதாபி T10 லீக்கில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
எனினும், இலங்கை அணி, ஏப்ரல் மாதம் வரை மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கெதிரான சுற்றுப்பயணங்களில் விளையாடவுள்ளதால், தேசிய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் உபாதைகள் மற்றும் உடற்குதியினை கருத்தில் கொண்டு அபுதாபி T10 லீக்கில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட முன்னணி வீரர்கள் அனைவருக்கும் தடையில்லா சான்றிதழை வழங்காமல் இருக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதுமாத்திரமின்றி, இந்த வருடத்தில் இலங்கை அணி அதிகளவு போட்டித் தொடர்களில் விளையாடவுள்ளதால் வெளிநாட்டு லீக் தொடர்களில் இலங்கை கிரிக்கெட் சபையின் வருடாந்த ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட முன்னணி வீரர்கள் எவருக்கும் விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்காமல் இருக்கவும் தேர்வுக் குழு அவதானம் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கடந்த மாதம் நிறைவுக்கு வந்த அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக்கில் சகலதுறையிலும் பிரகாசித்து தொடரின் வளர்ந்துவரும் வீரருக்கான விருதை வென்ற தனன்ஜய லக்ஷான், மற்றும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடிய சுழல் பந்துவீச்சாளர் மஹேஷ் தீக்ஷன ஆகிய இருவரும் நிகொலஸ் பூரான் தலைமையிலான நொர்தென் வொரியர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளனார்.
>> அபுதாபி T10 தொடரில் விளையாடவுள்ள 12 இலங்கை வீரர்கள்!
இதனிடையே, கடந்த வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை சார்பாக களமிறங்கிய 19 வயதுடைய வலதுகை வேகப் பந்துவீச்சாளரும், மாலிங்கவின் பாணியில் பந்துவீசி அனைவரது கவனத்தையும் பெற்றுக்கொண்டவருமான 19 வயதான மதீஷ பத்திரன, பங்ளா டைகர்ஸ் அணியில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான குமார் சங்கக்கார, குறித்த அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<