சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (16) நிறைவுக்கு வந்தது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, எதிரணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 135 ஓட்டங்களுக்கு சுருண்டது.
சரிவிலிருந்து மீள முயற்சிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி
இந்த நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் இரட்டைச் சதத்தின் உதவியுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து 421 ஓட்டங்களைக் குவித்தது.
இதன்மூலம் முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கையைவிட இங்கிலாந்து அணி 286 ஓட்டங்களால் முன்னிலை பெற்றதுடன், தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வருகின்ற இலங்கை அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்களை எடுத்தது.
இதனிடையே, சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான காலி மைதானத்தில் இலங்கை அணி துடுப்பாட்டத்தில் சறுக்கியதுடன், பந்துவீச்சிலும் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை.
இதில் இலங்கை அணிக்கு போட்டியின் இரண்டாவது நாளில் 2 விக்கெட்டுகளை மாத்திரமே எடுக்க முடிந்தது. எனவே, இலங்கை அணியின் பந்துவீச்சு தொடர்பில் திருப்தி அடைய முடியுமா? என்ற கேள்விக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டேவிட் சார்கர் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,
போட்டியின் முதலிரண்டு நாட்களும் எங்களுக்கு மிகவும் கடினமாக அமைந்துவிட்டது. நாங்கள் போட்டியில் பின்தங்கிய நிலையில் உள்ளோம். எனவே, எஞ்சியுள்ள இரண்டு நாட்களிலும் சிறப்பாக விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
போட்டியின் இரண்டாவது நாளில் டில்ருவான் பெரோராவும், வனிந்து ஹஸரங்கவும் சிறப்பாக பந்தவீசவில்லை. இதனால் இங்கிலாந்து வீரர்கள் அதிக ஓட்டங்களைக் குவித்தனர். உண்மையில் ஜோ ரூட் சிறப்பாக விளையாடியிருந்தார். அதேபோல, அறிமுகப் போட்டியில் விளையாடிய டேன் லோரன்ஸும் அரைச்சதம் கடந்து அவ்வணிக்கு வலுச்சேர்த்தார்.
Video – அடுத்தடுத்து சாதனைகளை படைக்கும் கால்பந்தின் நட்சத்திரங்கள் | FOOTBALL ULAGAM
இதில் குறிப்பாக, லசித் எம்புல்தெனிய மாத்திரம் சிறப்பான முறையில் பந்துவீசியிருந்தார். ஆனால் அவருக்கு மறுபுறத்தில் இருந்து எந்தவொரு பந்துவீச்சாளரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. உண்மயில் இரண்டு பந்துவீச்சாளர்களை மாத்திரம் தொடர்ந்து பந்துவீச வைக்க நாங்கள் தீர்மானித்தோம். ஆனால் அது ஏமாற்றத்தில் முடிந்தது” என அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்தப் போட்டியில் தனது நான்காவது இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்த இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் தொடர்பில் டேவிட் சார்கர் கருத்து வெளியிடுகையில்,
”ஜோ ரூட் உலகின் அதிசிறந்த வீரர். அவரிடம் சிறந்த திட்டமொன்று இருந்தது. அவர் எமது பந்துவீச்சாளர்களை நன்றாக தெரிந்து வைத்திருந்தார். குறிப்பாக, சுழல் பந்துவீச்சாளர்களுக்கு நுணுக்கமாக முகங்கொடுத்து ஓட்டங்களைக் குவித்தார்.
அவர் Crease க்கு பின்னால் இருந்து கொண்டு தான் துடுப்பெடுத்தாடியிருந்தார். இதனால் பந்துவீச்சாளர்களை நன்கு அறிந்து கொண்டு முன்னுக்கு வந்து துடுப்பெடுத்தாடினார். குறிப்பாக Sweep துடுப்பாட்ட பிரயோகங்களை அதிகளவில் மேற்கொண்டார்.
உண்மையில் அவர் பல இடங்களில் இருந்து துடுப்பெடுத்தாடியதால் எமது பந்துவீச்சாளர்கள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தனர். அவரைக் கட்டுப்படுத்த எமது பந்துவீச்சாளர்களால் முடியாமல் போனது” என குறிப்பிட்டார்.
காலி கோட்டையில் அமர்ந்து செய்தி சேகரித்த விளையாட்டு ஊடகவியலாளர்
இதுஇவ்வாறிருக்க, தென்னாபிரிக்கா அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் பிரகாசித்த வேகப் பந்துவீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோவை இங்கிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஏன் விளையாட செய்யவில்லை என்ற கேள்விக்கு டேவிட் சார்கர் பதிலளிக்கையில்,
”உண்மையில் விஷ்வ பெர்னாண்டோவுக்குப் பதிலாக அசித பெர்னாண்டோவை நாங்கள் இந்தப் போட்டியில் விளையாடச் செய்தமைக்கு சில காரணங்கள் இருந்தன.
அசித பெர்னாண்டோவுக்கு தொடர்ச்சியாக விக்கெட்டுக்கு நேராக பந்துவீசுகின்ற திறமை உண்டு. அதேபோல, ரிவர்ஸ் ஸ்விங் பந்தும் அவரால் வீச முடியும் என நாங்கள் நினைத்தோம்.
அதுமாத்திரமின்றி, விஷ்வ பெர்னாண்டோவைக் காட்டிலும் அசித பெர்னாண்டோ மிகவும் வேகமாக பந்துவீசுவார். அதன்காரணமாகத் தான் நாங்கள் விஷ்வ பெர்னாண்டோவை இறுதி பதினொருவர் அணியில் இணைத்துக் கொள்ளவில்லை” என அவர் தெரிவித்தார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<