இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்

567

ஆடவர்களுக்கான இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக தம்மிக்க சுதர்ஷனவினை நியமனம் செய்திருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்திருக்கின்றது. 

அதன்படி, 2022ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள இளையோர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் வரை தம்மிக்க சுதர்ஷன இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கடமையாற்றவிருக்கின்றார்.  

>> மஹேல – சங்காவினால் PCR இயந்திரம் அன்பளிப்பு

புதிய நியமனம் பெற்றிருக்கும் தம்மிக்க சுதர்ஷன 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இலங்கை கிரிக்கெட் உயர்தர செயற்திறன் (High Performance) நிலையத்தில் துடுப்பாட்டப் பயிற்சியாளராக செயற்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

அதோடு, தம்மிக்க சுதர்ஷன 10 ஆண்டுகள் காலி றிச்மன்ட் கல்லூரியின் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றிருக்கின்றார். இவரது பயிற்சிக் காலத்தில் காலி றிச்மன்ட் கல்லூரி அணி மூன்று தடவைகள் அவர்களது பெரும்கிரிக்கெட் போட்டியில் மஹிந்த கல்லூரியினை வீழ்த்தியிருகின்றனர். 

அதுமட்டுமின்றி, தம்மிக்க சுதர்ஷனவின் ஆளுகைக் காலத்திற்குள் இருந்த றிச்மன்ட் கல்லூரி அணி டிவிஷன்-1 பாடசாலைக் கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக ஜொலித்திருந்ததோடு 6 தடவைகள் சம்பியன்ஷிப் பட்டங்களை கைப்பற்றியிருக்கின்றது. 

இன்னும் இலங்கை கிரிக்கெட் அணியில் ஜொலித்து வருகின்ற தனன்ஞய டி சில்வா, வனிந்து ஹஸரங்க மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தம்மிக்க சுதர்ஷனவிடம் பாடசாலைக் காலத்தில் பயிற்சி பெற்ற வீரர்கள் என்பதும் சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும். 

Watch – ABU DHABI T10 லீக்கில் குமார் சங்ககக்காரவுக்கு ஆலோசகர் பதவி..!

பயிற்சியாளர் ஆக முன்னர் வலதுகை துடுப்பாட்டவீரராக கிரிக்கெட் போட்டிகளில் ஜொலித்த தம்மிக்க சுதர்ஷன 129 முதல்தரக் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 5000 ஓட்டங்களுக்கு மேல் குவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<