ஆசிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக இவ்வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் குவைட்டில் நடைபெறவிருந்த நான்காவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரானது இவ்வருடம் ஒக்டோபர் மாதம் வரை ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, குறித்த போட்டித் தொடரை இலக்காகக் கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் கொழும்பில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கனிஷ்ட வீரர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகளும் ஒத்திவைக்கப்படுவதாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
முன்னதாக, பெப்ரவரி மாதம் சாதாரண தர பரீட்சை நடைபெறுவதால் இவ்வாறு கனிஷ்ட வீரர்களுக்கான தகுதிகாண் போட்டிகளை நடத்துவது அசாதாரணம் என வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களினால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், ஆசிய ஒலிம்பிக் சங்கத்தின் இந்த முடிவானது இலங்கையில் உள்ள கனிஷ்ட வீரர்களுக்கு சற்று மன ஆறுதலை கொடுத்துள்ளது.
பாடசாலை வீராங்கனையால் 1,500 மீற்றரில் புதிய சாதனை
இதனிடையே, சீனாவின் சன்யா நகரில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவும் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 28ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி வரை ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 2021 ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை அதனை ஒத்திவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், 2022இல் சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவை மாத்திரம் திட்டமிட்டபடி நடத்துவதற்கு சீனா அரசாங்கம் மற்றும் அந்நாட்டு சுகாதாரப் பிரிவு ஆகியன இதுவரை அனுமதி வழங்கியிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<