“தசாப்தத்தில் சிறந்த வீரர்” விருதை வென்றார் விராத் கோஹ்லி

213

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ICC) அறிவிக்கப்பட்டுள்ள இந்த தசாப்தத்திற்கான விருதுகளில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் ஆகிய இரண்டு விருதுகளை வென்றுள்ளார். 

சர்வதேச கிரிக்கெட் பேரவை, கடந்த 10 வருடங்களில் சிறந்த டெஸ்ட் அணி, ஒருநாள் மற்றும் T20 அணிகளை நேற்று (27) அறிவித்தது.

ICC இன் இந்த தசாப்தத்திற்கான அணிகளில் சங்கா, மாலிங்க

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவை கடந்த 10 வருடங்களில் மூன்று விடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் சிறந்து விளங்கிய வீரர்கள் யார்? ஒட்டுமொத்தமாக சிறந்த வீரர் யார்? என்பதை இன்று வெளியிட்டுள்ளது.  

இதற்காக தனது வலைத்தளத்தில் இணையத்தள வாக்கெடுப்பும் நடத்தியது. அதில் கிட்டதட்ட 1.5 மில்லியன் மக்களுக்கு மேல் பங்கேற்று தங்களின் வாக்குகளை அளித்தனர்

அதன்படி, இந்தத் தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் தசாப்தத்தின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும் கோஹ்லி தேர்வு செய்யப்பட்டுள்ளார்

கடந்த 10 வருடங்களில் விராட் கோஹ்லி T20, ஒருநாள், டெஸ்ட் ஆகியவற்றில் சேர்த்து 20,396 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 66 சதங்கள், 94 அரைச்சதங்கள் அடங்கும். 70 இன்னிங்ஸ்களுக்கும் மேலாக விராட் கோஹ்லியின் சராசரி 56.97 சதவீதமாகும்

அத்துடன், கடந்த 10 வருடங்களில் ஒருநாள் போட்டிகளில் 10,000 இற்கும் மேற்பட்ட ஓட்டங்களை கோஹ்லி குவித்துள்ளார். இதில் 39 சதங்கள், 48 அரைச்சதங்களை அவர் அடித்துள்ளார். வீரராக களத்தில் இருந்து 112 பிடியெடுப்புகளை கோஹ்லி பிடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவரது துடுப்பாட்ட சராசரி 61.89 ஆக உள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண அணியிலும் கோஹ்லி இடம்பெற்றுள்ளார் என்பதால், கோஹ்லிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது

சிறந்த டெஸ்ட் வீரர் 

கடந்த 10 வருடங்களில் சிறந்த டெஸ்ட் வீரராக அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 வருடங்களில் டெஸ்ட் போட்டிகளில் 7,040 ஓட்டங்களை ஸ்மித் குவித்துள்ளார். இதில் 26 சதங்களும் 28 அரைச்சதங்களும் அடங்கும்

சிறந்த T20 வீரர்

கடந்த 10 வருடங்களில் T20 போட்டிக்கான சிறந்த வீரருக்கான விருது ஆப்கானிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் ஷீத் கானுக்கு வழங்கப்பட்டுள்ளது

கடந்த 10 வருடங்களில் அதிகபட்சமாக 89 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். இதில் 3 முறை 4 விக்கெட்டுக்களையும், 2 முறை 5 விக்கெட்டுக்களையும் ஷீத் கான் வீழ்த்தியுள்ளார்

தோனிக்கு விருது 

இந்திய அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ் தோனிக்கு ஐசிசியின் கடந்த 10 வருடங்களில் ஐசிசி இன் கிரிக்கெட் ஆட்ட நல்லுணர்வுக்கானSPRIT OF CRICKET” விருது அறிவிக்கப்பட்டுள்ளது

2011ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது நடைபெற்ற சம்பவத்துக்காக தோனிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.  

குறித்த போட்டியில் இங்கிலாந்து வீரர் இயன் பெல் ஆட்டமிழந்தார் என்று நடுவர் அறிவித்தும் அது ரன் அவுட் இல்லை, ஆட்ட உணர்வுக்கு எதிரானது என்று தோனி அவரை மீண்டும் விளையாடச் சொன்னார். இந்த சம்பவத்துக்காக கிரிக்கெட் ஆட்ட நல்லுணர்வுக்கான விருதினை அவர் பெற்றுக்கொண்டுள்ளார்

சிறந்த வீராங்கனை

ஐசிசி தசாப்தத்தின் அதிசிறந்த சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை விருதை அவுஸ்திரேலியாவின் எலிஸ் பெரி வென்றெடுத்தார்

எலிஸ் பெரி 73 மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2 சதங்களுடன் 2,621 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அவரது துடுப்பாட்ட சராசரி 68.97 ஆகும். பந்துவீச்சில் 25.09 என்ற சராசரியுடன் 98 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.  

100 மகளிர் சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளில் 30.39 என்ற சராசரியுடன் 1,155 ஓட்டங்களைப் பெற்றுள்ள பெரி, 20.64 என்ற சராசரியுடன் 89 விக்கெட்களைக் கைப்பற்றியள்ளார்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<