மிக்கி ஆத்தர் எம்முடன் இருப்பது அதிஷ்டம் – திமுத் கருணாரத்ன

483

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரான திமுத் கருணாரத்ன, இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நாளை (26) ஆரம்பமாகவிருக்கும் சந்தர்ப்பத்தில் இணையவழி மூலமான நேர்காணல் ஒன்றில் பங்கேற்றிருந்தார்.  

இந்த நேர்காணலில் கேட்கப்பட்ட சில கேள்விகளும், அவற்றுக்கு திமுக் கருணாரத்ன வழங்கியிருந்த பதில்களும் கீழே. 

  • கே – அணியில் இணைந்திருக்கும் வேகப் பந்துவீச்சாளர்கள் குறித்து என்ன நிலையில் உள்ளீர்கள்? 

நாம் கடந்த 2019ஆம் ஆண்டில் தென்னாபிரிக்க மண்ணுக்குச் சென்ற போது இருந்ததனை விட தற்போது எங்களது பந்துவீச்சுத் தொகுதியானது பலமாக இருக்கின்றது. கடந்தமுறை எம்மிடம் லஹிரு குமார மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் இருக்கவில்லை. ஆனால், இம்முறை அவர்கள் எங்களிடம் இருப்பதனை அதிர்ஷ்டமாக கருதுகின்றோம். 

இலங்கை அணியின் தயார்படுத்தல்கள் குறித்து மிக்கி ஆத்தர்

நாம் அவர்களின் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு இணையாக செயற்படாது போயின் அவர்கள் வழமை போன்று அவர்களுக்கு சாதகமான ஒரு நிலையினை பெற்றுக்கொள்வார்கள். எனினும், நாம் இம்முறை போதுமான அளவிற்கு எம்மிடம் தேர்வுகளை கொண்டிருக்கின்றோம் என உணர்கின்றேன். இரண்டு அணிகளும் திறமை அடிப்படையில் தற்போது வேறுபடுத்த முடியாத அளவிற்கு காணப்படுகின்றன. இரண்டு அணிகளுக்கும் தொடரினை வெல்வதற்கான சரிசமமான வாய்ப்புக்கள் உள்ளன. 

புதன்கிழமை (23) சுரங்க லக்மால் துரதிஷ்டவசமாக பயிற்சிகளின் போது தசை உபாதை ஒன்றுக்கு ஆளாகியிருந்தார். இதனால், முதல் டெஸ்ட் போட்டியில் அவர் ஆடுவது சந்தேகமாகவிருக்கின்றது. நாம் அவரின் நிலைமையினை தொடர்ந்து ஆராய்ந்து அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கு தயாராக இருக்கின்றாரா? என்பதை பார்க்கவுள்ளோம். 

  • கே – உயிர் பாதுகாப்பு வலயம் (Bio Bubble) எந்தளவிற்கு வீரர்கள் மீது தாக்கம் செலுத்தியிருக்கின்றது?

உண்மையில் அது வீரர்கள் மீது பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது. நாம் இங்கே கட்டுப்பாடுகளுக்கு பணிய வேண்டிய நிலை காணப்படுகின்றது. இதில் உள்ள ஒரு நல்ல விடயம் என்னவெனில், இந்த உயிர் பாதுகாப்பு வலயத்திற்குள் வீரர்கள் ஒரு அணியாக நீண்ட நேரத்தினை செலவழிக்கின்றனர். 

எனினும், நீங்கள் இந்த அளவு நேரம் உயிர் பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கும் போது அது உங்களது மனநிலையில் சிறு தாக்கத்தினை ஏற்படுத்தும். 

  • கே – ஒசத பெர்னாந்து மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோரின் இடத்தினை அணியில் யார் நிரப்பவிருக்கின்றனர்?

ஒசத பெர்னாந்து இல்லாத நிலையில் நாம் லஹிரு திரிமான்ன அல்லது குசல் ஜனித் பெரேரா ஆகிய இருவரில் ஒருவரினைக் கொண்டு முன்வரிசையினை பலப்படுத்தவுள்ளோம். குசல் பெரேரா திறமையினை தென்னாபிரிக்க நிலைமைகளில் அவரினது அதிரடி ஆட்டம் மூலம் நிரூபித்திருந்தார். எனவே, அவருக்கு 26ஆம் திகதி ஆரம்பமாகும் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பம் இருக்கின்றது. 

மெதிவ்ஸ் இல்லாததும் எங்களுக்கு பாரிய இழப்புக்களில் ஒன்று தான். நாம் அவரின் இடத்தினை வனிந்து ஹஸரங்க அல்லது தசுன் ஷானக்க மூலம் நிரப்ப எதிர்பார்த்திருக்கின்றோம். அப்படி செய்யும் போது அது எங்களுக்கு ஒரு மேலதிக பந்துவீச்சாளர் ஒருவருக்கான இடத்தினையும் பெற்றுக் கொடுக்கும். 

LPL இல் மேலதிக வீரராக இணைந்து ஹீரோவான தனன்ஜய லக்ஷான்  

  • கே – கடந்த மார்ச் மாதத்தில் இருந்து போட்டித்தன்மையான கிரிக்கெட் எதுவும் விளையாடாத காரணத்தினால் நீங்கள் அழுத்தத்தை உணர்கின்றீரா?

நான் காயம் காரணமாக உள்ளூர் முதல்தரப் போட்டிகளிலும் ஆடியிருக்கவில்லை. அதோடு, LPL தொடரிலும் ஆடவில்லை. இங்கே பயிற்சிப் போட்டியில் விளையாடவும் இல்லை. அதனால், நீண்ட காலத்தின் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வருவது கடினமான ஒன்று தான். ஆனால், நாங்கள் சிறப்பாகத் தயாராகியிருக்கின்றோம். நான் எனது சிறந்ததனை கொடுப்பதற்கு தயார் நிலையில் இருக்கின்றேன். 

வெற்றியோ அல்லது தோல்வியோ நாம் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக போட்டித்தன்மையான கிரிக்கெட் ஆட வேண்டும். வெற்றி பெறுவதற்கு துடுப்பாட்ட வீரர்கள் பாரிய பொறுப்பு ஒன்றினை எடுக்க வேண்டும் என நான் நம்புகின்றேன். 

  • கே – முதல் டெஸ்ட் போட்டிக்கான இறுதி 11 வீரர்கள் கொண்ட அணி உறுதி செய்யப்பட்டுவிட்டதா?

முதல் டெஸ்ட் போட்டிக்கான இறுதி 13 வீரர்கள் தற்போது தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். நாம் வெள்ளிக்கிழமை (25) நிலைமைகளை அவதானித்து முதல் 11 வீரர்களையும் தெரிவு செய்வோம். 

சுழல் பந்துவீச்சாளர்களில், வனிந்து ஹஸரங்க மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோரும் இந்த 13 வீரர்கள் பட்டியலில் அடங்குகின்றனர். 

  • கே – தென்னாபிரிக்க அணியினை நோக்கும் போது அவர்கள் அனுபவம் குறைந்தவர்களாக காணப்படுகின்றனர். நீங்கள் அவர்களது வீரர்களை ஆராய்ந்துள்ளீர்களா?

ககிஸோ றபாடாவிற்குப் பதிலாக என்ரிச் நோர்கியா பிரதியீடு செய்யப்பட்டதனை தவிர எம்மை 2019ஆம் ஆண்டில் எதிர்கொண்ட அணியே அவர்களின் அணியாக இருக்கும் என நான் நம்புகின்றேன். எனவே, நாம் கடந்தமுறை எதிர்கொண்ட அதே தென்னாபிரிக்க அணியே இம்முறையும் இருக்கும். 

Video – “தென்னாபிரிக்க அணியை வீழ்த்துவது இலகுவான விடயமல்ல” – திமுத் கருணாரத்ன!

ஆனால், தென்னாபிரிக்க அணியில் 7 புதிய வீரர்களும் காணப்படுகின்றனர். அனைவரும் அவர்களது நாட்டில் அண்மையில் நடைபெற்ற நான்கு நாட்கள் கொண்ட முதல்தரக் கிரிக்கெட் தொடரில் ஜொலித்த பின்னரே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். தேசிய அணியின் வீரர்களும் மிகவும் பலம்வாய்ந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் விளையாடியிருக்கின்றனர். 

(இந்த சந்தர்ப்பத்தில்) நாங்கள் வீரர்களின் பலம், பலவீனம் என்பவற்றை அறிந்து வைத்திருப்பதோடு, அதற்கு அமைவாகவே திட்டங்களையும் செயற்படுத்தவிருக்கின்றோம். 

  • கே – தென்னாபிரிக்க நிலைமைகளில் மிக்கி ஆத்தர் பயிற்சியாளராக இருப்பது எந்தளவிற்கு பெறுமதியானது?

இங்கே இருக்கும் நிலைமைகளை சரிவர தெரிந்து வைத்திருக்கும் மிக்கி ஆத்தரினை நாம் பயிற்சியாளராக கொண்டிருப்பது அதிர்ஷ்டமே. அவர் தென்னாபிரிக்க அணியினையும் முன்னர் பயிற்றுவித்திருப்பதோடு, பாகிஸ்தானின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த போதும் அண்மையில் இங்கே வந்திருக்கின்றார். 

தற்போது எமது அணியில் இருக்கும் வீரர்கள் எவரும் செஞ்சூரியன் அரங்கில் ஆடியிருக்கவில்லை. எனவே, இந்த சந்தர்ப்பத்தில் மிக்கி ஆத்தரின் ஆலோசனைகள் எமக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்.   

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<