“பாகிஸ்தான் தேசிய அணியில் மொஹமட் ஆமிர் இல்லை” – PCB

PCB statement on Mohammad Amir

377

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஆமிர், சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு விருப்பம் இல்லையென பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் தெரிவித்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான, மொஹமட் ஆமிர் சர்வதேச போட்டிகளில் விளையாட விருப்பம் இல்லையென்ற தகவலை வெளிநாட்டு ஊடகம் ஒன்றிடம் அறிவித்திருந்தார். 

கன்னி LPL சம்பியன் கிண்ணம் ஜப்னா ஸ்டாலியன்ஸ் வசம்

குறிப்பாக தற்போதுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முகாமைத்துவத்தின் கீழ் சர்வதேச போட்டிகளில் விளையாட தயாராக இல்லை எனவும் மொஹமட் ஆமிர் காணொளி மூலம் கருத்து வெளியிட்டிருந்தார். இந்தநிலையில், தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் இந்த விடயத்தை மொஹமட் ஆமிர் உறுதிசெய்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி வசீம் கான், ஆமிருடன் கலந்துரையாடினார். இதன்போது, மொஹமட் ஆமிர் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கான விருப்பமும், தீவிரமும் இல்லையென தெரிவித்துள்ளார்.

எனவே, அடுத்துவரும் சர்வதேச போட்டிகளில் மொஹமட் ஆமிர் பாகிஸ்தான் அணிக்காக இணைக்கப்படமாட்டார். அதேநேரம், இந்த முடிவானது மொஹமட் ஆமிரின் தனிப்பட்ட முடிவு. இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மதிப்பளிக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மொஹமட் ஆமிர் தற்போதைய நிலையில், இலங்கையில் நடைபெற்றுமுடிந்த லங்கா ப்ரீமியர் லீக்கின், கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார். இந்த தொடரில் 10 போட்டிகளில் விளையாடிய இவர், 11 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

அதேநேரம் ஒட்டுமொத்தமாக மொஹமட் ஆமிர், 36 டெஸ்ட் போட்டிகள், 61 ஒருநாள் போட்டிகள் மற்றும் 50 T20I போட்டிகளில் பாகிஸ்தான் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<