தென்னாபிரிக்க தொடரில் இருந்து விலகும் அஞ்செலோ மெதிவ்ஸ்

290
SLC

தசை உபாதை காரணமாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

LPL இறுதிப் போட்டியில் ஆடும் முதல் அணியாக கோல் கிளேடியேட்டர்ஸ்

லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் – கொழும்பு கிங்ஸ் அணிகள் மோதியிருந்தன. 

குறித்த போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணியின் தலைவராக செயற்பட்ட அஞ்செலோ மெதிவ்ஸிற்கு தசை உபாதை ஒன்று ஏற்பட்டிருந்தது. இதனால், குறித்த போட்டியின் இடைநடுவிலேயே அஞ்செலோ மெதிவ்ஸ் மைதானத்தினை விட்டும் வெளியேறினார். மெதிவ்ஸின் வெளியேறலோடு கொழும்பு கிங்ஸ் அணியும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியுடனான அரையிறுதியில் தோல்வியினை தழுவியது.

இவ்வாறான நிலையில், இன்று காலை வெளியான வைத்திய அறிக்கைகளின் அடிப்படையிலேயே அஞ்செலோ மெதிவ்ஸ் தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தில் பங்கேற்கமாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

மெதிவ்ஸ், தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தில் இருந்து வெளியேறியிருக்கும் விடயத்தினை இலங்கை கிரிக்கெட் சபையின் சிரேஷ்ட தேர்வாளரான அசந்த டி மெல் உறுதி செய்திருந்தார்.

“அஞ்செலோ மெதிவ்ஸ், தசை உபாதை காரணமாக தென்னாபிரிக்க மண்ணுக்கு செல்வது தடைப்பட்டிருக்கின்றது. ஆனால், அவரினை நாம் இங்கிலாந்து தொடருக்கு தயார்படுத்த எதிர்பார்த்திருக்கின்றோம். அதேநேரம், ஏற்கனவே 22 பேர் கொண்ட குழாம் தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்திற்காக தெரிவு செய்யப்பட்டிருப்பதால் (மெதிவ்ஸிற்கான) மேலதிக வீரர் ஒருவரினை பிரதியீடு செய்வது தொடர்பிலும் எமக்கு ஆலோசிக்க வேண்டியிருக்கின்றது.” என அசந்த டி மெல் ThePapare.com இடம் தெரிவித்திருந்தார்.

இலங்கை – தென்னாபிரிக்கா தொடர் நடைபெறுவது உறுதி

இலங்கை கிரிக்கெட் அணியினர், LPL T20 தொடர் நிறைவடைந்த பின்னர் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக எதிர்வரும் 17ஆம் திகதி தென்னாபிரிக்க மண்ணை நோக்கி பயணமாகின்றனர். 

அதேநேரம், ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக இந்த தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரினை அடுத்து எதிர்வரும் ஜனவரியில் இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதுகின்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இலங்கை மண்ணில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<