தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான டேல் ஸ்டெய்ன் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரில், கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு விளையாட சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கண்டி டஸ்கர்ஸ் அணி, LPL தொடரின் வீரர்கள் ஏலத்தில் கொள்வனவு செய்திருந்த வேகப் பந்துவீச்சாளர்களான வஹாப் ரியாஸ், லியம் ப்ளன்கெட் ஆகியோர் வெவ்வேறு காரணங்களினால் LPL தொடரிலிருந்து விலகினர்.
>> கண்டி டஸ்கர்ஸ் வீரர் சொஹைல் தன்வீருக்கு கொவிட்-19 தொற்று
அதனையடுத்து, இந்த வீரர்களுக்கு பிரதியீடாக கண்டி டஸ்கர்ஸ் அணி தமது குழாத்தில் பாகிஸ்தானின் வேகப் பந்துவீச்சாளர் சொஹைல் தன்வீரினையும், இந்தியாவின் முனாப் பட்டேலினையும் இணைத்தது. எனினும், இந்த வீரர்களில் கடந்த வாரம் இலங்கை வந்த சொஹைல் தன்வீருக்கு கொவிட் – 19 தொற்று உறுதியானது. இதனால் அவர் LPL தொடரில் விளையாடுவதிலும் சந்தேகம் உருவாகியிருந்தது.
இவ்வாறான நிலையில் கொவிட் தொற்று ஏற்பட்ட சொஹைல் தன்வீருக்குப் பதிலாகவே, கண்டி டஸ்கர்ஸ் அணியினர் டேல் ஸ்டெயினை தமது வீரர்கள் குழாத்தில் இணைப்பதற்கு பேச்சு வார்த்தைகள் நடாத்தி அதில் வெற்றி கண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மறுமுனையில் அனைத்து விடயங்களும் சரியாகும் பட்சத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் இலங்கை வரும் டேல் ஸ்டெய்ன், கண்டி டஸ்கர்ஸ் அணியுடன் இணைந்து LPL போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<