லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியினர், தங்களது புதிய இலச்சினையை இன்று (21) அறிமுகம் செய்திருக்கின்றனர்.
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவராக மாறிய கனாடா நாட்டு தொழிலதிபர், ராகுல் சூட் இன் நெறியாள்கைக்கு அமையவே புதிய இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் சிரேஷ்ட திட்டமிடல் அதிகாரி திரு. அனன்தன் அர்னோல்ட் புதிய இலச்சினையில் ராகுல் சூட் இன் நெறியாள்கை இருக்கும் விடயம் தொடர்பில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
”ராகுலின் புதுமைத் தன்மை, விளையாட்டினை முன்னேற்றுவதற்கான எண்ணம் சர்வதேச வியாபாரநாமங்களை (Brands) உருவாக்குவதில் இருக்கும் அறிவு என்பன பெறுமதிமிக்கவை.”
மேலும் கருத்து வெளியிட்ட அனன்தன் அர்னோல்ட், இலங்கையினையும் யாழ்ப்பாண நகரினையும் தளமாக கொண்ட ஒரு அணியினை உலக அளவில் தாம் அறிமுகம் செய்ய எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டு, அந்த அணியின் இரசிகர்கள் பெருமையுடன் உணர்வதற்கு வழிவகைகள் செய்திருப்பதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்திருந்தார்.
இதேநேரம், கணினி உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருக்கும் ராகுல் சூட் லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் அணிகளில் ஒன்றில் இணைந்தது தனக்கு வாழ்நாளில் ஒரு தடவை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் ஒன்று எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில், பலத்த எதிர்பார்ப்புக்களுடன் உள்ள லங்கா ப்ரீமியர் லீக் தொடர் இம்மாதம் 26ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<