முழுமையாக மாற்றம் பெற்ற LPL

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

3087
An insight into latest LPL squad

கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) T20 கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து டெஸ்ட் அந்தஸ்த்து பெற்ற அனைத்து நாடுகளிலும் T20 லீக் தொடர்கள் ஆரம்பமாகின. 

ஆசிய நாடுகளில் இந்தியாவில் .பி.எல், பாகிஸ்தானில் பி.எஸ்.எல், பங்களாதேஷில் பி.பி.எல், ஆப்கானிஸ்தானில் .பி.எல் என அனைத்து நாடுகளிலும் ஒரு T20 ப்ரீமியர் லீக் தொடர் நடக்கும் நிலையில், பல ஆண்டுகளாக இலங்கையும் எப்படியாவது ஒரு T20 லீக்கை வெற்றிகரமாகத் தொடர்ந்து நடத்திவிடவேண்டும் எனத் தவியாய்த் தவித்தது.  

2012 ஸ்ரீலங்கன் ப்ரீமியர் லீக் என்ற பெயரில் T20 லீக் தொடரொன்று நடைபெற்றாலும், அதன்பிறகு துரதிஷ்டவசமாக அந்தத் தொடரை நடத்த முடியாமல் போனது

எனவே, தற்போதுள்ள இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகத்தின் அயராத முயற்சியின் பிரதிபலனாக பல சோதனைகளையும் தாண்டி லங்கா ப்ரீமியர் லீக் என்ற பெயரில் புதிய T20 லீக் தொடரொன்றை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

>> LPL ஒளிபரப்பு உரிமை சுயாதீன தொலைக்காட்சிக்கு

கொரோனாவால் திகதிகள் தள்ளிப்போனாலும், இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகவுள்ளது

இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள ஜப்னா ஸ்டாலியன்ஸ், கொழும்பு கிங்ஸ், கண்டி டஸ்கர்ஸ், தம்புள்ள வைக்கிங் மற்றும் கோல் க்ளேடியேட்டர்ஸ் உள்ளிட்ட ஐந்து அணிகளும் தற்போது ஹம்பாந்தோட்டையை வந்தடைந்துள்ளதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களும் இலங்கையை வந்தடைந்த வண்ணம் உள்ளனர்

இலங்கை கிரிக்கெட் சபையுடன் இணைந்து .பி.ஜி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள அங்குரார்ப்பண லங்கன் ப்ரீமியர் லீக் T20 தொடரில் இருந்து பல முன்னணி வீரர்கள் விலகியுள்ளனர்.

அத்தோடு பல முன்னணி வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவார்களா என்பது குறித்த சந்தேகமும் எழுந்துள்ளது. மேலும், இத்தொடரின் முதல் 10 நாட்களுக்கான போட்டிகளை நடத்துவதிலும் சிக்கல் நிலை எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Watch – அடுத்த T20i திருவிழா தயார்: நவம்பர் 26இல் ‘LPL’ |Sports RoundUp – Epi 139

இதன்காரணமாக ஒவ்வொரு அணிகளும், ஒவ்வொரு நாளும் பல்வேறு முக்கிய மாற்றங்களை தத்தமது அணிகளில் ஏற்படுத்திவரும் நிலையில், மிகுதி உள்ள இடங்களை நிரப்பும் பணிகளிலும் அந்த அணிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன

கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், கிட்டத்தட்ட அனைத்து வெளிநாட்டு வீரர்களும், அதிகாரிகள் மற்றும் அணி உரிமையாளர்கள் ஹம்பாந்தோட்டையை வந்தடைந்துள்ளனர்.

இருப்பினும், கடைசி நிமிடத்தில் தொடரிலிருந்து விலகல், காயங்கள் மற்றும் முழு கொடுப்பனவுகளின் தொழில்சார்ந்த கோரிக்கைகள் காரணமாக, உரிமையாளர்கள் அணிகளில் ஏராளமான மாற்றங்களைச் செய்துள்ளனர், அவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை மற்றும் முறையாக அறிவிக்கப்படவும் இல்லை.

ஓட்டுமொத்தத்தில் லங்கா ப்ரீமியர் லீக் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் ஒரு வாரத்தை விட குறைந்த காலம் எஞ்சியுள்ள நிலையில், ஒவ்வொரு அணிகளும் தமக்கான இறுதி அணியை உறுதி செய்வதில் தடுமாறிக் கொண்டிருக்கின்றது

>> கண்டி டஸ்கர்ஸ் அணியில் இந்திய – பாகிஸ்தான் வேகப்பந்து ஜோடி

இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் ஏற்பட்ட மிகப்பெரிய ஏமாற்றங்களில் ஒன்றாக கண்டி டஸ்கர்ஸ் மற்றும் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிகளைச் சேர்ந்தயுனிவர்ஸ் பாஸ்கிறிஸ் கெய்ல் மற்றும் இலங்கை T20 அணித் தலைவர் லசித் மாலிங்க ஆகியோர் திடீரென தொடரிலிருந்து வெளியேறிய சம்பவம் உள்ளது.  

இந்நிலையில், T20 போட்டிகளில் சுப்பர் ஸ்டார்களாக வலம்வந்து கொண்டிருக்கின்ற கிறிஸ் கெய்லின் இடத்திற்கு ஜிம்பாப்வே அணியின் அதிரடி ஆட்டக்காரர் ப்ரெண்டன் டெய்லர் கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு மாற்று வீரராக இணைக்கப்பட்டுள்ளார். 

எனினும், இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் பெரிதும் எதிர்பார்ப்புடன் இருந்த மாலிங்க தொடரில் இருந்து விலகினாலும், அவருக்கான மாற்றீட்டு வீரர் எவரும் இன்னும் பெயரிடப்படவில்லை.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் இடம்பெற்றுள்ள கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் தலைவராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் சர்ப்ராஸ் அஹமட், நியூஸிலாந்து தொடருக்காக தெரிவு செய்யப்பட்டதால் இத்தொடரிலிருந்து விலகிக் கொண்டார்

இதனால், அந்த அணியின் உள்ளூர் நட்சத்திர வீரராக அறிவிக்கப்பட்ட, லசித் மாலிங்க தலைவராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரும் தொடரிலிருந்து விலகியதால் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிக்கு புதிய தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது

எதுஎவ்வாறாயினும், கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் தலைவராக சஹீட் அப்ரிடி செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டாலும், தனது மகளுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனத்தால் அவரால் ஒருசில ஆரம்ப போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

>> லங்கா ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து விலகும் கிறிஸ் கெயில்

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவுக்கு வந்த பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் சம்பியன் பட்டம் வென்ற கராச்சி கிங்ஸ் அணியில் இடம்பிடித்து 2 முக்கிய விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய பாகிஸ்தானின் இடதுகை சுழல் பந்துவீச்சாளரான வகாஸ் மக்சூத், லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

இதேநேரம், கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியில் இடம்பெற்ற ஏனைய வெளிநாட்டு வீரர்களான அசாம் கான், மொஹமட் ஆமிர், ஹஸ்ரத்துல்லாஹ் ஸசாய், சாட்விக் வால்டன் மற்றும் அஹ்சன் அலி ஆகியோர் ஏற்கனவே இலங்கையை வந்தடைந்துவிட்டனர்.

இதுஇவ்வாறிருக்க, கண்டி டஸ்கர்ஸ் அணியைப் பொறுத்தமட்டில் கிறிஸ் கெய்லின் மாற்றீட்டைத் தவிர, மீதமுள்ள ஐந்து வெளிநாட்டு வீரர்களாக இர்பான் பதான், சொஹைல் தன்வீர், ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ், நவீன் உல்ஹக் மற்றும் முனாப் படேல் ஆகியோர் ஹம்பாந்தோட்டைக்கு வருகைதந்து சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் சொஹைல் தன்வீருக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் தற்போது பிரத்தியேகமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்னா ஸ்டாலியன்ஸ்

இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரில் சிறந்த முகாமைத்துவம் மற்றும் திறமையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களைக் கொண்ட அணியாக ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி உள்ளது

பாகிஸ்தானைச் சேர்ந்த சகலதுறை வீரர் சொஹைப் மலிக் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் உஸ்மான் கான் ஷின்வாரி, தென்னாபிரிக்காவின் வேகப் பந்துவீச்சாளர்களான கெயல்  அபோட் மற்றும் டுன்னே ஒலிவீர், இங்கிலாந்தைச் சேர்ந்த சகலதுறை வீரர் ரவி பொபாரா மற்றும் துடுப்பாட்டக்காரரும்விக்கெட் காப்பாளருமான டொம் முவர்ஸ் ஆகிய ஆறு வீரர்கள் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்களாவர்.

இதில் இங்கிலாந்தின் ரவி பொபரா சம்பளம் குறித்த பிரச்சினைகளால் விமானநிலையம் வரை வந்த பிறகு தொடரில் இருந்து வெளியேறினார். மறுபுறத்தில் பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் சொஹைப் மலிக் இலங்கை வருவதில் சற்று தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர் நவம்பர் 22ஆம் திகதி இலங்கையை வந்தடைவார் என ஜப்னா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே, குறித்த இரண்டு வீரர்களையும் தவிர்த்து மற்றைய ஐந்து வீரர்களும் ஹம்பாந்தோட்டையில் உள்ள ஹோட்டலில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

>> ஜப்னா ஸ்டாலியன்ஸின் இணை உரிமையாளராகும் Microsoft Ventures ஸ்தாபகர்

எதுஎவ்வாறாயினும், ரவி பொபாராவுக்குப் பதிலாக மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரரான ஜான்சன் சார்லஸால் ஜப்னா அணியுடன் இணைந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுபுறத்தில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இலங்கை அணியின் இடதுகை சுழல்பந்து சகலதுறை வீரரான சதுரங்க டி சில்வா காய்ச்சலிலிருந்து இன்னும் 100 சதவீதம் குணமடையவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அவருக்குப் பதிலாக இடதுகை சுழல்பந்துவீச்சாளர் பிரபாத் ஜயசூரியவை ஜப்னா அணி ஆரம்ப சில போட்டிகளில் களமிறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தம்புள்ள வைக்கிங்

ஆரம்பத்தில் இருந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டு வந்த இந்திய நடிகர் சுனில் ஜோஸிக்கு சொந்தமான தம்புள்ள வைக்கிங் அணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த சொஹைப் மக்சூத், அன்வர் அலி ஆகியோருடன் ஆப்கானிஸ்தான் சகலதுறை வீரரான அப்தாப் ஆலம் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக இடம்பிடித்துள்ளனர்.

அத்துடன், கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய வேகப் பந்துவீச்சாளர் சுதீப் தியாகியும் தம்புள்ள வைக்கிங் அணியுடன் இணைந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஓவைஷ் ஷாவின் பயிற்றுவிப்பின் கீழ் களமிறங்கவுள்ள தம்புள்ள அணியில், போல் ஸ்டேர்லிங் மற்றும் சமித் பட்டேல் ஆகிய இருவரும் வெளிநாட்டு வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்

>> LPL தொடரில் புதிதாக இணையும் இங்கிலாந்து, பாக் வீரர்கள்!

இந்த அணிக்காக ஆரம்பத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களான கார்லோஸ் பிராத்வைட், பிரெண்டன் டெய்லர் மற்றும் லென்ட்ல் சிம்மன்ஸ் ஆகியோர் இலங்கை வரமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் சில தினங்களுக்கு முன்பு பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாட கார்லோஸ் பிராத்வைட் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

அதேபோன்று, மற்றொரு பாகிஸ்தான் வீரரான விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் கம்ரான் அக்மல் தம்புள்ள அணியில் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும் இறுதித் தருவாயில் அவரும் பங்கேற்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவருக்கான பிரதியீட்டு வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

இதுஇவ்வாறிருக்க, இந்த மாத இறுதியில் மொரிஷியஸ் தீவுகளில் நடைபெறவுள்ள T10 லீக்கில் விளையாடவிருந்த இலங்கை அணியின் இடதுகை சுழல் பந்துவீச்சாளரான மலிந்த புஷ்பகுமார மீண்டும் நாடு திரும்பி தம்புள்ள வைக்கிங் அணியுடன் இணைந்துகொள்ளவுள்ளார்.

கொழும்பு கிங்ஸ்

இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணி ஆரம்பத்தில் பலமிக்க அணியாக பார்க்கப்பட்டது

எனினும், அணி நிர்வாகம் திடீரென மாற்றப்பட்டததையடுத்து புதிய பயிற்சியாளர், புதிய வீரர்கள் என பல மாற்றங்கள் செய்யப்பட்டன.

எதுஎவ்வாறாயினும், கொழும்பு கிங்ஸ் அணியில் விளையாடுவதற்கு வெளிநாட்டு வீரர்கள் ஏழு பேர் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர்.

அண்ட்றே ரசல் (மேற்கிந்தியத் தீவுகள்), மான்ப்ரீத் கோனி (இந்தியா), லோரி இவேன்ஸ் மற்றும் டெனியல் பெல்ட்ருமன் (இங்கிலாந்து), கைஸ் அஹ்மத் மற்றும் கரிம் கான் சாதீக் (ஆப்கானிஸ்தான்), ரவிந்தர்பால் சிங் (கனடா) ஆகியோரே அந்த அணியில் இடம்பெறும் ஏழு வெளிநாட்டு வீரர்களாவர்.

கனடாவிலிருந்து வருகை தந்த ரவிந்தர்பால் சிங்குக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதால் அவர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்தது.

>> கொழும்பு கிங்ஸ் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக ஹெர்ஷல் கிப்ஸ்!

அதேபோல, ரவிந்தர்பால் சிங்குடன் ஒரே விமானத்தில் இலங்கை வந்த ஆன்ட்ரே ரஸலும் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

இருப்பினும், ஆன்ட்ரே ரஸலுக்கு மீண்டும் ஒருமுறை PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு தான் நவம்பர் 26ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மறுபுறத்தில் ரவிந்தர்பால் சிங் கொரோனா அறிகுறியற்றவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

எனினும், தேவையான சுகாதார நடைமுறைகளைப் பெற்ற பின்னரே அவரும் அணியில் இணைத்துக்கொள்ளப்படுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன

இதேவேளை, தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடரினை முன்னிட்டு கண்டி பல்லேகலை மைதானத்தில் இலங்கை வீரர்கள் பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். இதில் 18 பேர் லங்கா ப்ரீமியர் லீக்கில் விளையாடவுள்ளதுடன், இந்த வீரர்கள் அனைவரும் எதிர்வரும் 22ஆம் திகதி ஹம்பாந்தோட்டையை வந்தடையவுள்ளனர்

எதுவ்வாறாயினும், இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரில் பங்கேற்கவுள்ள ஐந்து அணிகளினதும் இறுதி வீரர்கள் பற்றி முழுமையானன விபரம் எதிர்வரும் 24ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<