துரையப்பா அரங்கிற்கு செயற்கை ஓடுபாதை – அமைச்சர் நாமல்

910

யாழ் மாவட்ட விளையாட்டுத்துறை அபிவிருத்தி திட்டங்கள் விரைவாகவும் தூர நோக்குடனும் செயற்படுத்தப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

ஜப்னா ஸ்டலியன்ஸ் மூலம் மாற்றம் பெறவுள்ள வட மாகாண கிரிக்கெட்

யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, மீன் பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணத்தில் விளையாட்டுத் துறையினை முன்னேற்றும் பொருட்டு பல்வேறுபட்ட கலந்துரையாடல்களையும் விஜயங்களையும் மேற்கொண்டனர். 

நேற்றைய (08) தினம் யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்படட இளைஞர் சேவைகள் மன்றத்தின் கட்டடத்தினை திறந்து வைத்தபோது உரையாற்றிய அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, “யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் மற்றும் உதைப்பந்தாட்டத்திற்கென இரு விளையாட்டு அரங்குகளை அமைக்கவுள்ளோம்” என்பதனை தெரிவித்தார்.   

குறித்த நிகழ்வினை தொடர்ந்து மாலையில், யாழ் மாவட்ட விளையாட்டுத்துறை சார் அதிகாரிகள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், 

”மாவட்டத்தின் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு ஐந்து ஆண்டுகால திட்டமொன்றினை வகுத்துள்ளோம். அடுத்த வருடத்தில் அதிகளவில் பாடசாலைகளில் விளையாட்டுத்துறையினை முன்னேற்றுவதற்கான செயற்பாடுகளிற்கே முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. அதற்கு அடுத்தடுத்த வருடங்களில் அடுத்தகட்ட அபிவிருத்தி செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும்.

நாடு முழுவதிலும் 1000 மைதானங்களினை தரமுயர்த்தும் செயற்திடத்தின் கீழ் ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் ஒவ்வொரு மைதானங்கள் வீரர்கள் பயன்படுத்துவதற்கு உரிய தரத்தில் அபிவிருத்தி செய்யப்படும்” என்று தெரிவித்தார். 

Video – LPL தொடரில் விளையாடவுள்ள தமிழ் பேசும் வீரர்கள் யார்?|முழுமையான பார்வை..!

யாழ் மாவட்டத்தில் பொருத்தமான இடமொன்றில் கபடி, வலைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்குரிய இடத்தினை அரசாங்க அதிபர் அவர்களினை தேர்வு செய்யுமாறு கோரிய அமைச்சர், குறித்த மைதானத்தினை அமைச்சு அபிவிருத்திசெய்து வீரர்களின் பயன்பாட்டிற்கு விரைவாக கையளிக்கும் என்பதனையும் தெரிவித்தார்.

பின்னர் அமைச்சரை சந்தித்த, யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்க தலைவர் ரவிவர்மனின் கோரிக்கைகளை அமைச்சர் கேட்டு அறிந்ததுடன், யாழ் மாவட்டதிற்கு தகுதிவாய்ந்த கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் ஒருவரினை நியமிப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

இன்று (09) காலையில் யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட திடல் மற்றும் துரையப்பா விளையாட்டரங்கு ஆகியவற்றிற்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, குறித்த மைதானங்களின் நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், அவற்றின் தேவைப்பாடுகள் குறித்து அறிந்துகொண்டார். 

இதன்போது, தற்போதுள்ள 400m ஓடுபாதையை, சுமார் 210 மில்லியன் ரூபா செலவில் 6 சுவடுகளை கொண்ட செயற்கை ஓடு பாதையாக  4 வருட காலப்பகுதியில் மேம்படுத்துவதற்கும், துரையப்பா அரங்கிலும் ஏனைய முக்கிய மைதானங்களிலும் பொதுமக்கள் பாவனைக்கு ஏற்றவாறான உடற்பயிற்சி நிலையங்களை நிறுவுவதற்கும் ஏற்பாடுகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். 

மேலும், மாவட்டத்தின் முக்கிய அடையாளமாக விளங்கும் துரையப்பா விளையாட்டரங்கினை தொடர்ச்சியான செயற்பாட்டில் வைத்திருப்பதற்குரிய முன்மொழிவுகளை மாநகரசபை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் இடமிருந்து கோரியுள்ளார். குறித்த நிகழ்வின்போது வலைப்பந்தாட்ட நட்சத்திரம் தர்ஜினி சிவலிங்கமும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடர் நடப்பது உறுதி

விளையாட்டுத்துறை அமைச்சரின் இந்த விஜயம் குறித்து ThePapare.com  இற்கு பிரத்யேகமாக கருத்து தெரிவித்த யாழ் மாநகர முதல்வரும், யாழ் உதைபந்தாட்ட லீக்கின் தலைவருமான இம்மானுவேல் ஆர்னோல்ட், 

”அமைச்சர் மாவட்டத்தில் விளையாட்டுத்துறையினை மேன்படுத்துவதற்குரிய ஆக்கபூர்வமான திட்டங்களை அறிவித்துள்ளார், அவை செயல் வடிவம் பெறுகையில் மிகவும் பயனுள்ளதாக அமையும். நேற்றைய சந்திப்பின்போது அவர் அறிவித்துள்ள திட்டங்களில் பல எமது மாநகர சபையின் கீழேயே வருகின்றன. குறிப்பாக அவர் துரையப்பா விளையாட்டரங்கினை மேம்படுத்துவதிலும், அதனை நாள் முழுவதும் பல்வேறுபட்ட விதமாக இயங்குநிலையில் வைத்திருப்பதற்குரிய அம்சங்களினை கொண்டுவருவதி்லும் அதிக ஆர்வம் கொண்டுள்ளதை தெரிவித்தார். இதில், பொது மக்கள் பயன்படுத்தக்கூடிய உடற்பயிற்சி நிலையம் முக்கிய ஒன்றாக அமையும். 

குறித்த முன்மொழிவுகள் உண்மையில் மகிழ்வளிக்கின்றது. அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி நிலையத்தினை 2022 ஆம் ஆண்டளவில் தரமுயர்த்தித் தருவதாகவும், மாதாந்த உதைப்பந்தாட்ட முன்னேற்றம் தொடர்பான சந்திப்புகளிற்கு ஏற்பாடு செய்வதுடன், அடுத்ததாக அதற்கான முன்னேற்றகரமான செயற்பாடுகளை ஏற்பாடு செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார். குறித்த திட்டங்கள் மாவட்ட விளையாட்டுத்துறை அபிவிருத்தியில் பாரிய எழுச்சிக்கு வழிவகுக்கும்” எனவும் தெரிவித்தார்.  

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<