ஐ.பி.எல். தொடரில் நேற்று (21) நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் சிராஜ் புதிய சாதனையொன்றை பதிவுசெய்துள்ளார்.
பெங்களூர் அணியை பொருத்தவரை அதிக ஓட்டங்களை எதிரணிக்கு வழங்குகிறார் என்ற விமர்சனத்துக்கு முகங்கொடுத்து வந்தவர் மொஹமட் சிராஜ். அவர் இறுதியாக விளையாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்ததன் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
சென்னை அணியிலிருந்து வெளியேறும் பிராவோ!
எனினும், அவருடைய ஸ்விங் பந்துவீச்சினை நம்பிக்கையாகக்கொண்டு இன்றைய தினம் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, சிராஜை களமிறக்கியிருந்தார்.
பெங்களூர் அணியின் எதிர்பார்ப்பையும் மீறி, அபாரமாக பந்துவீசிய சிராஜ், அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததுடன், தன்னுடைய 4 ஓவர்களில் வெறும் 8 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதுமாத்திரமன்றி பெங்களூர் அணிக்காக பவர்-ப்ளே (Power play) ஓவர்களை வீசிய சிராஜ், தன்னுடைய அபாரமான ஸ்விங் பந்துவீச்சினால், எதிரணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை தடுமாறச்செய்திருந்தார். அதன்படி, தன்னுடைய முதல் இரண்டு ஓவர்களிலும், எந்தவொரு ஓட்டத்தினையும், துடுப்பாட்ட வீரர்களுக்கு வழங்காமல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி சிராஜ் அசத்தியிருந்தார்.
ஐ.பி.எல். வரலாற்றில் எந்தவொரு பந்துவீச்சாளரும் இரண்டு ஓட்டமற்ற பந்து ஓவர்களை இதுவரை வீசியதில்லை. ஆனால், சிராஜ் இரண்டு ஓட்டமற்ற ஓவர்களை அடுத்தடுத்த ஓவர்களில் வீசியதுடன், மூன்று விக்கெட்டுகளையும் குறித்த ஓவர்களில் கைப்பற்றி, ஐ.பி.எல். தொடரில் புதிய வரலாற்று சாதனையொன்றை பதிவுசெய்துள்ளார்.
Video – டோனி ஏன் நடராஜனிடம் விக்கெட்டினை கொடுத்தார்? | Cricket Galatta Epi 41
மொஹமட் சிராஜ் தன்னுடைய முதல் விக்கெட்டாக ராஹூல் ட்ரிபாதியை ஆட்டமிழக்கச்செய்ததுடன், அடுத்த பந்தில் நிதிஷ் ரானாவை போல்ட் முறையில் வெளியேற்றினார். எனினும், துரதிஷ்டவசமாக ஹெட்ரிக் விக்கெட்டை கைப்பற்ற தவறியிருந்தார். எவ்வாறாயினும், தன்னுடைய அடுத்த பந்து ஓவரில் டொம் பென்டமின் விக்கெட்டினை வீழ்த்தி மூன்றாவது விக்கெட்டினை பதிவுசெய்தார்.
இதேவேளை இந்தப் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, தங்களுடைய பந்துவீச்சு இன்னிங்ஸில் மொத்தமாக 4 ஓட்டமற்ற ஓவர்களை வீசியிருந்தது. மொஹமட் சிராஜ் 2 ஓட்டமற்ற ஓவர்கள், க்ரிஸ் மொரிஸ் மற்றும் வொசிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒவ்வொரு ஓட்டமற்ற ஓவர்களை வீசியிருந்தனர். இதன்படி, ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை ஒரு இன்னிங்ஸில் 2 ஓட்டமற்ற ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டிருந்தது. குறித்த சாதனையும் இன்றைய தினம் பெங்களூர் அணி முறியடித்திருந்தது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<