பாகிஸ்தான் முன்னாள் துடுப்பாட்ட வீரரான மிஸ்பா உல் ஹக், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்திருக்கின்றார்.
>> டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி திட்டமிட்டபடி நடக்கும்: ஐ.சி.சி
மிஸ்பா உல் ஹக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும், அந்நாட்டின் கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவராகவும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் செயற்பட்டு வந்திருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) கொண்டுவந்திருக்கும் புதிய கொள்கைகளின் அடிப்படையிலேயே அவருக்கு தேர்வுக் குழு தலைவர் பதவியில் நீடிக்க முடியாத நிலை உருவாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக தொடர்ந்தும் நீடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தான் தேர்வுக் குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவது குறித்து மிஸ்பா உல் ஹக், இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
“எனக்கு விருப்பத்திற்குரியது களத்தில் வேலை செய்வதாக இருக்கின்றது. எனவே, அதுவே நான் இந்த முடிவு எடுப்பதற்கு காரணம். நான் வீரர்களுடன் இணைந்து பணிபுரிவதனை விரும்புகின்றேன்.”
இதேவேளை, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மிஸ்பா உல் ஹக்கின் ஆளுகைக்குள் வந்த பின்னர் இரண்டு நாடுகளுக்கு எதிரான சர்வதேச தொடர்களிலேயே ஆடியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, குறித்த சர்வதேச தொடர்களில் பாகிஸ்தான் சுமாரான முடிவுகளை காட்டியிருந்த காரணத்தினால் பாகிஸ்தான் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்தும் மிஸ்பா உல் ஹக் விலக வேண்டும் என விமர்சனங்கள் எழுந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கவிடயமாகும்.
மிஸ்பா உல் ஹக் பதவி விலகியிருக்கும் நிலையில் அந்நாட்டு கிரிக்கெட் சபை புதிய தேர்வுக் குழு தலைவர் தொடர்பில் எந்த அறிவிப்புக்களையும் இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<