ஹெட்ரிக் தோல்வியுடன் அபராதத்தையும் பெற்ற ஸ்மித்

245
Steven Smith
@Iplt20.com

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் மந்த கதியில் பந்துவீச்சு பிரதியை மேற்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இந்திய ரூபாய்ப்படி 12 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

>> இலங்கையில் ஒத்திவைக்கப்படும் அடுத்த கிரிக்கெட் தொடர்

13ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 20ஆவது லீக் போட்டி ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று (06) அபுதாபி, ஷேக் ஷெயிட் மைதானத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ஓட்டங்களினால் அபார வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ள அதேவேளை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தொடர்ச்சியாக ஹெட்ரிக் தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. 

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 193 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

>> இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா T10 சுப்பர் லீக்!

சாதாரணமாக T20 போட்டியொன்றில் 20 ஓவர்களையும் நிறைவு செய்வதற்கு ஒரு மணித்தியாலம் 30 நிமிடங்கள் வழங்கப்படும். ஆனால் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு பந்துவீசுவதற்கு குறித்த ஒன்றரை மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் தேவைப்பட்டிருந்தது. இதன் காரணமாக இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் குறைந்த பந்துவீச்சு பிரதியை மேற்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு, 2020 ஐ.பி.எல் தொடரில் முதல் குற்றம் என்ற அடிப்படையில் (குறைந்த அபராதமாக) 12 இலட்சம் இந்திய ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு விதிக்கப்பட்ட அபராதமானது 2020 இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் மூன்றாவது முறையாக அபராதம் விதிக்கப்பட்ட சந்தர்ப்பமாகும். இதற்கு முன்னர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணியின் தலைவர் ஷிரேயஸ் ஐயர் ஆகியோர் இதே குற்றத்திற்காக அபராதத்திற்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<